லாகூர்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷரிஃப், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ‘பனமா பேப்பர்ஸ்’ வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அவர் பிரதமர் பதவியை இழந்தார்.
பொது மன்றக் கூட்டம் உள்ளூர் ஹோட்டல் ஒன்றில் நடைபெறவிருப்பதாக ‘தி டான்’ நாளிதழ் தெரிவித்தது.
பிரிட்டனில் நான்கு ஆண்டுகள் நாடுகடந்து வாழ்ந்த 74 வயதான அவர், சென்ற ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தான் திரும்பினார்.
அந்த முன்னணிப் பதவிக்கு 11 கட்சி உறுப்பினர்கள் வேட்புமணுத் தாக்கல் படிவங்களைப் பெற்றிருந்தாலும் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு ஷரிஃப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ‘பிஎம்எல்-என்’ பஞ்சாப் தலைவர் ரானா சானாவுல்லா செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கோடிகாட்டினார்.
அந்த முன்னாள் பிரதமருக்கு எதிராக மற்றவர்கள் போட்டியிடுகிறார்களா என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், திரு ஷரிஃபுக்கு எதிராக எந்தக் கட்சி உறுப்பினரும் போட்டியிட விரும்பினால், அவர்கள் முன்வரவேண்டும் என்று திரு சானாவுல்லா கூறினார்.
புதிய தலைவருக்கு வாக்களிக்க கட்சி ஏன் ஜனநாயகச் செயல்முறையைக் கையாளவில்லை என்று கேட்டபோது, பொதுக் கட்சியாக அதை உருவாக்கியது திரு ஷரிஃப் என்று திரு சானாவுல்லா பதில் அளித்தார்.

