தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பினாங்கு முன்னாள் துணை முதல்வர் ராமசாமி வெளிநாடு செல்லத் தடை

2 mins read
0f7225c8-a04e-4633-b40e-9ffdf22b3f79
புதன்கிழமை பிற்பகல் 12.25 மணிக்குப் புறப்பட்ட ஃபையர் ஃபிளைட் விமானத்தில் பயணம் செய்ய பினாங்கு விமான நிலையம் சென்ற ராமசாமி. - படம்: ஊடகம்

ஜார்ஜ் டவுன்: பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பி. ராமசாமி வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புதன்கிழமை (டிசம்பர் 4) காலை அவர் இந்தோனீசியாவின் அச்சே மாநிலம் செல்வதற்காக பினாங்கு அனைத்துலக விமான நிலையம் சென்றபோது குடிநுழைவுத் துறை அவரது பயணத்துக்குத் தடை விதித்தது. பிற்பகல் 12.25 மணிக்குப் புறப்பட்ட ஃபையர் ஃபிளைட் விமானத்தில் அவர் செல்வதாக இருந்தது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க, குடிநுழைவுத் துறையின் கறுப்புப் பட்டியலில் ராமசாமி சேர்க்கப்பட்டு உள்ளதாக அவரிடமே அதிகாரிகள் கூறினர்.

அச்சே மாநிலத் தலைநகர் பண்டா அச்சேயில், ராமசாமிக்கு அமைதிக்கான விருது வழங்குவதற்கான விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதில் கலந்துகொள்ளச் சென்றபோதுதான் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளார்.

தமக்கு விதிக்கப்பட்டு உள்ள தடை குறித்து ஊடகங்களிடம் அதிருப்தியை ராமசாமி வெளிப்படுத்தினார்.

“அச்சே விடுதலை கோரும் குழுவுக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்தோனீசியாவில் அமைதி விருதைப் பெற உரிமை கட்சி நிர்வாகிகளுடன் நான் பயணம் மேற்கொண்டேன்.

“ஆனால், நான் தடுக்கப்பட்டு உள்ளேன். எனக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையம் என்ன ஆதாரத்தை வைத்துள்ளது. நான் எந்தவொரு குற்றமும் செய்யவில்லை. குற்றம் சாட்டப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் கூட வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுகிறார்,” என்று ராமசாமி கூறினார்.

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு தெரிவித்ததாக ஊடகங்கள் கூறின.

மேலும், பினாங்கு மாநில இந்து அறக்கட்டளை வாரியத்தின் முன்னாள் உறுப்பினர்களிடம் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருவதன் ஒரு பகுதியாக, வாரியத்தின் முன்னாள் தலைவர் என்ற முறையில் ராமசாமிக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்