சோல்: அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முன்னாள் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தற்பொழுது அதை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டை தென்கொரிய நீதிமன்றம் ஒன்று நிராகரித்து விட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் ஜனவரி 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட செய்தித் தகவலில் கூறியுள்ளது.
அந்தத் தகவலின்படி, திரு யூனின் வழக்கறிஞர்கள் கைது ஆணைக்கு எதிராக ஜனவரி 2ஆம் தேதி முறையீடு செய்தனர். அதற்கு அடுத்த நாள் 2.700 காவல்துறை அதிகாரிகளுடன் உயர் அதிகாரிகள் கைது ஆணைப்படி திரு யூனைக் கைது செய்ய முயன்றனர். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. திரு யூனின் பாதுகாப்புப் படைப் பிரிவு அவர் கைது செய்யப்படுவதைத் தடுத்தது.
டிசம்பர் மாதம் 31ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட கைது ஆணை ஜனவரி 6ஆம் தேதி (திங்கட்கிழமை) வரைதான் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கொரியாவில் சிறிது நேரமே நீடித்த அவசரநிலையை பிரகடனம் செய்தற்காக திரு யூன் சுக் இயோல் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சோலில் உள்ள அதிபர் மாளிகையில் திரு யூன் தொடர்ந்து தங்கி வருகிறார். அவரது வழக்கறிஞர்கள் அவருக்கு எதிரான கைது ஆணை செல்லாது எனக் கூறி வருகின்றனர்.