தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரியா: மக்கள் சக்தி கட்சியை விட்டு விலகும் முன்னாள் அதிபர்

1 mins read
34bbd508-688f-4bb9-b104-dfd0ee67cb30
தென்கொரியாவைப் பாதுகாக்கும் கடமையை நிறைவேற்ற கட்சியிலிருந்து விலகுவதாக முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல் - தென்கொரியாவில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் பழமைவாத மக்கள் சக்தி கட்சியிலிருந்து விலகுவதாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெள்ளிக்கிழமை (மே 16) பதிவிட்டுள்ளார்.

ஜூன் 3ஆம் தேதி திடீர் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு மக்கள் சக்தி கட்சியின் அதிபர் வேட்பாளரைவிட ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் லீ ஜே மியுங் முன்னிலை வகிக்கும் நிலையில் திரு யூன் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மே 15ஆம் தேதி வெளியிடப்பட்ட கேலப் கொரிய கருத்துக் கணிப்புப்படி கிட்டத்தட்ட 29 விழுக்காட்டினர் மக்கள் சக்தி கட்சி அதிபர் வேட்பாளர் கிம் மூன் சூவை ஆதரித்தனர். ஜனநாயகக் கட்சியின் லீக்கு 51 விழுக்காட்டு ஆதரவு கிடைத்தது.

டிசம்பரில் அதிரடியாக ராணுவச் சட்டத்தை அறிவித்த திரு யூன், பின்னர் அரசியல் குற்றச்சாட்டை எதிர்கொண்டு அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த வாக்காளர்களின் ஆதரவைப் பெற கட்சி உறுப்பினர்கள் திரு யூனைக் கட்சியிலிருந்து விலகும்படி கூறினர்.

“சுதந்திர கொரியாவைப் பாதுகாக்கும் என் கடமையை நிறைவேற்ற மக்கள் சக்தி கட்சியிலிருந்து விலகுகிறேன். தயவுசெய்து உங்கள் ஆதரவை கிம் மூன் சூவுக்குத் தாருங்கள்,” என்று திரு யூன் பதிவிட்டார்.

அதிபர் வேட்பாளர்கள் லீக்கும் கிம்முக்கும் இடையிலான முதல் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி மே 18ஆம் தேதி நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்