பங்ளாதேஷ் திரும்பத் திட்டமிடும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா

பங்ளாதேஷ் திரும்பத் திட்டமிடும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

24 Nov 2026 - 12:25 pm

2 mins read

புதுடெல்லி: பதவிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தஞ்சமடைந்துள்ள பங்ளாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா டிசம்பர் 16ஆம் தேதி நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளார்.

1971ல் பாகிஸ்தானுடனான விடுதலைப் போர் முடிவுக்கு வந்த நாளின் ஆண்டு நிறைவையொட்டி அவர் நாடு திரும்ப விரும்புகிறார். அவரது பேச்சாளர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதனைத் தெரிவித்தார்.

நாடு திரும்புவதற்கான தேதியை ஹசினா அறிவித்திருப்பது இதுவே முதன்முறை. அவரது கட்சி தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலும், நவம்பர் தொடக்கத்தில் அவர் புதிய கடப்பிதழ், பிற ஆவணங்களைக் கோரியதிலிருந்து வன்முறை அதிகரித்துள்ள சூழலிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது அரசியல், சட்டப் பதற்றங்களை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2024 ஆகஸ்ட் 5ஆம் தேதி பங்ளாதேஷ் விமானத்தில் ஹசினா இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், தேசிய விமான நிறுவனமான பிமான் பங்ளாதேஷ் ஏர்லைன்ஸ்மூலம் அவரைப் புதுடெல்லியிலிருந்து டாக்காவுக்கு அழைத்துச் செல்ல அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என அவரின் பேச்சாளர் சையது மொசம்மல் அலி வலியுறுத்தினார்.

அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக நாடுகடத்தப்பட்ட ஹசினாவை டிசம்பர் 16 வெற்றி நாளில் தாயகம் அழைத்து வருவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் கூறினார். இது குறித்து பங்ளாதேஷ் அரசாங்கப் பேச்சாளர் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹசினா நாடு திரும்பினால் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் விமானத்தை அனுப்புவது குறித்து இந்தியாவுடன் அதிகாரத்துவப் பேச்சு நடைபெறவில்லை எனவும் பங்ளாதேஷ் அமைச்சர் ஒருவர் நவம்பர் 22ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்