டாக்கா: பங்ளாதேஷின் இடைக்காலப் பிரதமர் முகம்மது யூனுஸ், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆட்சி 16 ஆண்டுகள் வீசிய கடும் புயலைப் போல இருந்ததாக வருணித்துள்ளார்.
நீண்ட காலப் பிரதமராக இருந்த திருவாட்டி ஹசினா ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்டதை அடுத்து திடீரென பதவிக்கு வந்தபோது திகைத்துப்போனதாக திரு யூனுஸ் பிபிசி செய்தி நிறுவனத்திடம் சொன்னார்.
நாட்டைவிட்டு தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் புகுந்த திருவாட்டி ஹசினாவும் அவரது கட்சியும் இவ்வாண்டு நடத்தப்படவிருக்கும் தேர்தலில் பங்கேற்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார் திரு யூனுஸ்.
இவ்வாண்டு தேர்தலில் யார் பங்கேற்கலாம் என்பதைத் தேர்தல் ஆணையம் முடிவுசெய்யும்.
இப்போதைக்கு அமைதியையும் ஒழுங்கையும் நிலைநிறுத்துவதற்குத்தான் திரு யூனுஸ் முக்கியத்துவம் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
பங்ளாதேஷின் பொருளியல் சீர்குலைந்திருப்பதாகவும் சொன்ன அவர், அதைச் சீர்படுத்த முயல்வதாகச் சொன்னார்.