தென்கொரிய முன்னாள் தற்காப்பு அமைச்சர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி

1 mins read
0b3dda7b-aa0b-43b8-8bfb-172d65d7547b
சோல் தடுப்புக்காவல் நிலையத்தில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற தென்கொரிய முன்னாள் தற்காப்பு அமைச்சர் கிம் யோங் ஹியுன். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரிய முன்னாள் தற்காப்பு அமைச்சர் கிம் யோங் ஹியுன், சோல் தடுப்புக்காவல் நிலையத்தில் தனது உயிரை மாய்த்துகொள்ள முயன்றதாகத் தென்கொரிய சீர்திருத்தச் சேவை உயரதிகாரி ஷின் யோங் ஹே புதன்கிழமையன்று (டிசம்பர் 11) கூறினார்.

தடுப்புக்காவல் நிலையத்தின் கழிவறையில் தனது ஆடையைப் பயன்படுத்தி திரு கிம் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் அதிகாரிகள் கழிவறைக் கதவைத் திறக்க முற்பட்டபோது அவர் தனது முயற்சியைக் கைவிட்டதாகவும் டிசம்பர் 11ஆம் தேதி தன்னிடம் அளித்த அறிக்கையில் அதிகாரிகள் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

திரு கிம் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

இத்தகவல்களை அனைத்தையும் திரு ஷின் யோங் ஹே தென்கொரிய நாடாளுமன்றக் கூட்டத்தில் உறுதிப்படுத்தினார்.

தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ராணுவ ஆட்சி சட்டத்தை டிசம்பர் 3ஆம் தேதி இரவு 10.23 மணிக்கு அறிவித்தார். அதைத் தொடர்ந்து அந்நாட்டில் பதற்றம் நீடித்த நிலையில், தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சட்ட அமலாக்கத்தைத் திரும்பப்பெற வாக்களித்தனர்.

டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் ராணுவ ஆட்சிச் சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டது.

அதிபர் யூன் அறிவித்ததிலும் நாடாளுமன்றத்தில் ராணுவம் அத்துமீறி நுழைந்ததிலும் திரு கிம்மிற்கு முக்கியப் பங்கு இருந்ததாகக் கூறப்பட்டது.

டிசம்பர் 5ஆம் தேதி தனது பதவியிலிருந்து விலகிய திரு கிம் டிசம்பர் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தியது, அவரசர நிலையின்போது நாட்டில் கலகத்தை ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.

குறிப்புச் சொற்கள்