தென்கொரிய முன்னாள் அதிபர் யூனுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை

2 mins read
1955ddd1-4c82-435d-a6dc-2c5d3c21eb11
நாடாளுமன்றத்தில் ராணுவச் சட்டத்தை அறிவித்த தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம். - படம்: இபிஏ

சோல்: தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்குச் சோல் மத்திய வட்டார நீதிமன்றம் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முற்பட்ட திரு யூனைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்ய முயன்றனர்.

அப்போது இடையூறு விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைத் திரு யூன் எதிர்நோக்கினார்.

ராணுவச் சட்டத்தை அறிவித்ததன் தொடர்பில் திரு யூனைக் கைதுசெய்யும்படி நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தது.

அதை நிறைவேற்ற முடியாதபடி திரு யூன் அதிபர் பாதுகாவல் சேவையைச் செயல்படுத்தி அதிகாரிகளைத் தடுத்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

அதிகாரபூர்வ ஆவணங்களை மாற்றியது, ராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டபூர்வ நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியது போன்ற குற்றச்சாட்டுகளும் திரு யூன்மீது சுமத்தப்பட்டுள்ளன.

தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து திரு யூன் மேல்முறையீடு செய்வார் என்று நீதிமன்றத்திற்கு வெளியே திரு யூனின் வழக்கறிஞர் திரு யூ ஜங் ஹுவா தெரிவித்தார்.

“அரசியல் ரீதியாகத் திரு யூனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து வருந்துகிறோம்,” என்று வழக்கறிஞர் திரு யூ குறிப்பிட்டார்.

நியாயமற்ற முறையில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன்ற மற்றொரு வழக்கு விசாரணையில் திரு யூனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.

அரசியல் சட்டத்தை அறிவிப்பது அதிபரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று திரு யூன் இதற்குமுன் வாதாடினார்.

அரசாங்கத்துக்குத் தடையாக இருக்கும் எதிர்க்கட்சிகளை எச்சரிக்க அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தம்மைக் கைதுசெய்ய வந்த அதிகாரிகளைத் தடுக்கும்படி பாதுகாப்புச் சேவை அதிகாரிகள் உத்தரவிட்டதுடன் வீட்டுக்குள் தம்மை அடைத்துக்கொண்ட குற்றத்துக்காகவும் திரு யூனுக்குப் பத்தாண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கக்கூடும்.

திரு யூனை 3,000க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் ஒருவழியாகக் கைதுசெய்தனர்.

தென்கொரியாவில் பதவியில் உள்ள அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை.

நாடாளுமன்றத்தில் திரு யூன் முன்வைத்த ராணுவச் சட்டத்தை அவரது சொந்த பழைமைவாதக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து நாடாளுமன்றம் சில மணி நேரங்களில் முறியடித்தது.

குறிப்புச் சொற்கள்