சோல்: தென்கொரியாவில் 2024ஆம் ஆண்டில் ராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்தார் அந்நாட்டின் அப்போதைய அதிபர் யூன் சுக் இயோல்.
தென்கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக் சூ, அதற்கான ஆவணங்களில் தாமதமாகக் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது.
பிறகு அந்த ஆவணங்களை அழித்துவிடும்படி அவர் கேட்டுக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) செய்தி வெளியிட்டன.
திரு இயூனின் முன்னாள் உதவியாளர் காங் யூ குவிடம் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தியபோது திரு ஹானின் இந்த நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்தபோது அதிபர் மாளிகையில் உயர் அதிகாரியாக இருந்த காங், ராணுவ ஆட்சி பிரகடன ஆவணத்தில் கையெழுத்திடுமாறு திரு ஹானிடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தென்கொரிய அரசமைப்புச் சட்டப்படி, ராணுவ விவகாரங்கள் குறித்து அதிபர் எடுக்கும் முடிவுகளுக்கு பிரதமர் மற்றும் அமைச்சர்களின் கையொப்பம் அவசியம்.
ஆனால் ராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்ட பிறகே திரு ஹான் ஆவணங்களில் கையெழுத்திட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆவணத்தை அமைச்சரவையிடம் அனுப்பிவைத்தபோது அதில் திரு ஹானின் கையெழுத்து இல்லை என்று தெரியவந்துள்ளது. தென்கொரியாவின் முன்னாள் தற்காப்பு அமைச்சருடன் திரு ஹானும் அந்த ஆவணங்களில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அவற்றை அழித்துவிடுமாறு காங்கிடம் திரு ஹான் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆவணத்தை அழிக்க அப்போதைய அதிபர் திரு யூன் ஒப்புதல் அளித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தின்போது என்னென்ன கலந்துரையாடப்பட்டன என்பது குறித்த போலி ஆவணத்தை காங் தயாரித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அந்தக் கூட்டத்தின்போது ராணுவ ஆட்சி பிரகடனம் குறித்து திரு இயூன் அறிவித்திருந்தார்.
அந்தக் கூட்டம் ஏறத்தாழ ஐந்து நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. ஆனால் அது 40 நிமிடங்களுக்கு நடைபெற்றது போல காங் ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.