சோல்: தென்கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டுக் சூவுக்கு 23 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல், ராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்தபோது அதற்கு உடந்தையாக இருந்ததற்காகவும் போலி ஆவணம் தயாரித்ததற்காகவும் வேறு சில குற்றங்களுக்காகவும் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.
ராணுவ ஆட்சியைப் பிரகடனப்படுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஹான் அழைப்பு விடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக சோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் கூறியது.
“பிரதமர் என்கிற முறையில் ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பு ஹான்னுக்கு இருந்தது. ஆனால், ராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்ய அப்போதைய அதிபர் நடவடிக்கைகள் எடுத்தபோது, ஹான் அதைத் தடுக்கவில்லை. அவர் கண்டும் காணாமல் இருந்துவிட்டார்,” என்று நீதிபதி தெரிவித்தார்.
76 வயது ஹான், தென்கொரிய ராணுவ ஆட்சி பிரகடனத்துடன் நேரடித் தொடர்புடைய குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் ஆள் என்பது குறிப்பிடத்தக்கது.

