முன்னாள் தென்கொரியப் பிரதமரின் சிறைத்தண்டனை 15 ஆண்டுகளாகக் குறைப்பு

முன்னாள் தென்கொரியப் பிரதமரின் சிறைத்தண்டனை 15 ஆண்டுகளாகக் குறைப்பு

1 mins read
ac9637b2-972b-4d2e-a260-e722611d2717
முன்னாள் தென்கொரியப் பிரதமர் ஹான் டக் சூவிற்கு (நடுவில்) இவ்வாண்டு ஜனவரியில் 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் 2024 டிசம்பரில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஹான் டக் சூவிற்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (மே 7) 15 ஆண்டுகளாகக் குறைத்தது.

ராணுவச் சட்டம் ஆறு மணி நேரமே நடப்பில் இருந்தது. வாக்கெடுப்பின்மூலம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதனைச் செயலிழக்கச் செய்தனர்.

முன்னதாக, இவ்வாண்டு ஜனவரி மாதம் கீழமை நீதிமன்றம் ஹானுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

நாட்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க முயன்ற அந்தச் சதிச்செயலில் ஹானுக்கும் பங்கிருந்ததாகக் கூறி, அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், 76 வயதான ஹான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அதிகாரியாக ஆற்றிய சேவையைக் கருத்தில்கொண்டு, மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கான தண்டனைக் காலத்தில் எட்டு ஆண்டுகளைக் குறைப்பதாக அறிவித்தது.

இருப்பினும், 1970 மற்றும் 80களிலேயே இத்தகைய சட்டவிரோத ராணுவச் சட்டங்களின் பாதிப்புகளை நேரில் கண்ட மூத்த அதிகாரி ஒருவர், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அதிபர் எடுத்த முடிவை எதிர்க்காமல் அவருக்குத் துணையாக நின்றது பொறுப்பற்ற செயல் என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

தற்போது சிறையிலுள்ள ஹான், தென்கொரியாவில் நிதியமைச்சர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்