கொழும்பு: ஆட்சிக்கவிழ்ப்பால் பதவியிழந்த முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (மே 29) சிறைத் தண்டனை விதித்தது.
ஒருவருக்கு 20 ஆண்டுச் சிறைத் தண்டனையும் மற்றொருவருக்கு 25 ஆண்டுச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சட்டத் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரான மகிந்தானந்த அலுத்கமாகேக்கு 20 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முன்னாள் வர்த்தக அமைச்சரான அனில் ஃபெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இருவரும், கோத்தபாயவின் மூத்த சகோதரரான மகிந்த ராஜபக்சே 2015ஆம் ஆண்டு மறுபடியும் தேர்தலில் வெற்றிபெற வகைசெய்ய 14,000 கேரம் பலகைகளையும் 11,000 டிரோட் விளையாட்டுக் கருவிகளையும் (draught sets) விநியோகித்தனர். 2015 தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வியுற்றார்.
அலுத்கமாகே, ராஜபக்சே தலைமையில் செயல்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்ற, ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆக மூத்த தலைவராவார்.
இந்த இரு முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு பதிவானது. அப்போது ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியில் இல்லை.
அதற்குப் பிறகு சென்ற ஆண்டு புதிய ஆட்சி அமையும் வரை வழக்கு விசாரணை மிகவும் மெதுவாகச் சென்றது.
வேறு விவகாரம் தொடர்பிலும் அலுத்கமாகே மீது விசாரணை நடந்துவருகிறது. அவர், உரம் பெறுவதற்காக 2022ஆம் ஆண்டு சீன நிறுவனம் ஒன்றுக்கு 6.09 மில்லியன் டாலர் (7.86 மில்லியன் வெள்ளி) கட்டணம் செலுத்தியதாக நம்பப்படுகிறது. அந்த உரம் அனுப்பப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அலுத்கமாகே, 2010லிருந்து 2015 வரை இலங்கையின் விளையாட்டு அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அவர், 2011ஆம் ஆண்டு ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி, இந்திய அணி வெல்வதற்குச் சாதகமாக ‘ஏற்பாடு’ செய்யப்பட்டதாக 2020ல் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பணம் தந்து செய்யப்பட்டதாக அவர் சொன்ன அந்த ‘ஏற்பாடு’ குறித்த விவரங்களை வெளியிட விரும்பவில்லை என்றும் அவர் அப்போது சொன்னார்.
அப்போட்டியின் இறுதியாட்டத்தில் இலங்கை அணி, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. அலுத்கமாகேயின் குற்றச்சாட்டுகளை இலங்கை வீரர்கள் மறுத்தனர்.