முன்னாள் இலங்கை அதிபர் ரணில் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
7a27d4f3-3230-4018-b891-c88afaa18dcb
கைதுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே நீர்ச்சத்து இழப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

கொழும்பு: அரசாங்க நிதியை முறைகேடு செய்ததாகக் கூறி கைதுசெய்யப்பட்ட முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 76, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கடுமையான பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்ற ரணில், கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைதுசெய்யப்பட்டார்.

நீர்ச்சத்து இழப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அவர், மறுநாள் சனிக்கிழமை கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதாக அம்மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரக்‌ஷன் பெல்லன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆறுமுறை பிரதமரான ரணில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார்.

பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் ஒன்றில் தம் மனைவி கௌரவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதன் தொடர்பாக பிரிட்டனில் நடந்த சிறப்புப் பட்டமளிப்பு நண்பகல் விருந்தில் ரணில் கலந்துகொள்ளச் சென்றது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ரணில் கைதுசெய்யப்பட்டிருப்பது இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ரணிலின் கைது ஜனநாயக விழுமியங்களின் மீதான தாக்குதல் என்றும் அதன் தாக்கமானது தனிமனிதனை அல்லது அரசியல் கட்சியைத் தாண்டியும் இருக்கும் என்றும் திருவாட்டி சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும் மைத்திரிபால சிறிசேனவும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 79 வயதான ராஜபக்சே சனிக்கிழமை சிறைக்கு நேரில் சென்று ரணிலைப் பார்த்துவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

குறிப்புச் சொற்கள்