இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது

2 mins read
2e985ebf-8386-41f3-9bb1-763c5f62f9c6
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆதரவாளர்களிடம் உரையாற்றும் காட்சி. - படம்: ராய்ட்டர்ஸ்

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க அரசாங்க நிதியைத் தவறாய்க் கையாண்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் நேற்று (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி ஊடகத்திடம் அதனைத் தெரிவித்தார்.

நாட்டின் அதிபராக இருந்தபோது 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிட்டி‌‌ஷ் பல்கலைக்கழகமொன்றில் அவரின் மனைவி கலந்துகொண்ட விழாவிற்காக விக்ரமசிங்க லண்டன் சென்றதன் தொடர்பில் விசாரிக்கப்பட்டதாய் அதிகாரி சொன்னார்.

சொந்தக் காரணங்களுக்கு அரசாங்க வளங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் அவர் கொழும்புத் துறைமுக நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்படுவதாக அதிகாரி குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டு ஹவானாவில் ஜி77 உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற பிறகு, விக்ரமசிங்க லண்டனுக்குப் போனார்.

உல்வர்ஹேம்ப்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அவரும் அவரின் மனைவி மைத்ரீயும் கலந்துகொண்டனர்.

தம் மனைவியின் பயணச் செலவை அவரே பார்த்துக்கொண்டார் என்றும் அரசாங்க நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும் விக்ரமசிங்க கூறுகிறார்.

இருப்பினும், விக்ரமசிங்க தமது தனிப்பட்ட பயணத்துக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாகக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை கூறுகிறது. அத்துடன், பாதுகாவலர்களின் பயணத்துக்கான செலவையும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் வெடித்தன. அவர் பதவி விலகினார். அதன் பிறகு அதே ஆண்டு ஜூலை மாதம் விக்ரமசிங்க அதிபரானார்.

இலங்கை அப்போது வரலாறு காணாத நிதி நெருக்கடியைச் சந்தித்தது. அந்த நேரத்தில் நாட்டின் பொருளியலை நிலைப்படுத்தியதற்காகத் திரு விக்ரமசிங்க பாராட்டப்பட்டார்.

சென்ற ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் அவர் தேர்தலில் தோல்வியடைந்தார்.

குறிப்புச் சொற்கள்