வாஷிங்டன்: தலிபான் அமைப்பின் முன்னாள் தளபதி, அமெரிக்க செய்தியாளர் ஒருவரையும் இரண்டு ஆப்கானியர்களையும் பிணைப்பிடித்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதிமன்றம் சனிக்கிழமை (ஏப்ரல் 26) தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் 2008ஆம் 2009ஆம் ஆண்டுகளில் 49 வயது ஹாஜி நஜிபுல்லா பிணையாளிகளைப் பிடித்துவைத்திருந்தார்.
முன்னாள் ராய்ட்டர்ஸ் செய்தியாளர் டேவிட் ரோட்டைப் பிணைப்பிடித்த ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நஜிபுல்லாமீது 2020ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்டது. ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
இதற்குமுன் அந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட நஜிபுல்லா, 2007ஆம் ஆண்டுக்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க வீரர்களின் மரணம் தொடர்பான வழக்கிலும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நஜிபுல்லாவின் தலைமையின்கீழ் இருந்த தலிபான் போராளிகள், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தை எப்படிக் குறிவைத்தனர் என்பதை அமெரிக்க நீதிமன்றம் சுட்டியது. அத்துடன், பிரெஞ்சு, அமெரிக்கத் துருப்புகளையும் குறிவைத்ததாக நஜிபுல்லா பிரெஞ்சு செய்தியாளரிடம் அளித்த நேர்காணலின்போது சொன்னதையும் நீதிமன்றம் முன்வைத்தது.
“இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் மனிதநேயத்துக்கு மதிப்பளிக்காததைக் காட்டுகிறது. நமது குடிமக்களின் மரணத்தில் வகித்த பங்கை நஜிபுல்லா இறுதியில் ஒப்புக்கொண்டார்,” என்றார் மத்திய புலனாய்வுப் பிரிவு இணை இயக்குநர் கிறிஸ்டஃபர் ரையா.
அமெரிக்காவின் நியூயார்க் நீதிபதி ஜேய் கிளேடன், பயங்கரவாதச் செயல்கள் மூலம் அமெரிக்கர்களுக்குத் தீங்கு விளைவிப்போர் உலகில் எங்கிருந்தாலும் அவர்களைத் தீவிரமாகத் தொடர்ந்து பிடிப்போம் என்று சூளுரைத்தார்.

