பேங்காக்: தாய்லாந்தின் மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் உட்பட 50,000 க்கும் மேற்பட்ட கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் அரச மன்னிப்பைப் பெறுகிறார்கள் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கிடைத்திருக்கும் அரச மன்னிப்பு, திரு தக்சின் ஷினவாத்தை உடனடியாக ஊழல் வழக்குகளுக்காக விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து விடுவிக்கும் என்று கூறப்பட்டது.
ஏறக்குறைய ஓர் ஆண்டுக்கு முன், அவரது தண்டனை 8 ஆண்டிலிருந்து ஓர் ஆண்டாகக் குறைக்கப்பட்டதை அடுத்து, திரு தக்சின் தற்போது பரோலில் உள்ளார். அவருக்கு முன்னதாக 2024ல் பரோல் வழங்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 31 அன்று அவர் விடுதலை செய்யப்படவிருந்தார்.
கைதிகள், தடுப்புக் காவலில் உள்ளோர், பரோலில் இருப்பவர்களுக்கு சமூகத்திற்கு பங்களிப்பதற்கான புதிய வாய்ப்பை வழங்க மன்னர் பொதுமன்னிப்பு வழங்கினார் என்று ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசிதழ் இணையத்தள அறிக்கை கூறியது.
பரோலில் விடுவிக்கப்பட்ட சுமார் 7,500 பேரில் திரு தக்சினும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டது.
திரு தக்சினின் இளைய மகள் பேடோங்டார்ன் ஷினவாத், ஆகஸ்ட் 16ஆம் தேதி நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, தாய்லாந்தின் புதிய பிரதமரானார்.
நெறிமுறைகளை மீறிய வழக்கில் அதே பியூ தாய் கட்சியின் உறுப்பினரான திரு ஸ்ரெத்தா தவிசினை நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் பதவி நீக்கம் செய்ததை அடுத்து, திருமதி பேடோங்டார்ன் பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று புளூம்பர்க் செய்தி விவரித்தது.

