பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத், பரோலில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பேங்காக்கின் ‘கிளோங் பிரேம்’ சிறையிலிருந்து திங்கட்கிழமை (மே 11) அவர் விடுதலையானபோது, சிறைச்சாலைக்கு வெளியே திரண்டிருந்த ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையைத் தவிர்க்கும் வகையில், நீண்ட நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், எட்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது விடுதலையாகியுள்ளார்.
தலைமுடி ஒட்ட நறுக்கப்பட்டு, வெள்ளை நிறச் சட்டை அணிந்திருந்த தக்சின், புன்னகையுடன் காணப்பட்டார். தம் மகளும் அரசியல் வாரிசுமான பேடோங்டார்ன் ஷினவாத் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை அவர் கட்டித்தழுவினார்.
2025 ஆகஸ்ட்டில், தக்சின் சிறைக்குச் செல்வதற்கு 10 நாள்களுக்கு முன்பு பேடோங்டார்ன் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
தக்சினை வரவேற்க, அவரது கட்சியின் அடையாளமான சிவப்பு நிற உடைகளை அணிந்து நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். அவர் வெளியே வந்ததும், “நாங்கள் தக்சினை நேசிக்கிறோம்,” என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
தற்போதைய உணர்வு குறித்து செய்தியாளரின் கேள்விக்கு, தமது இரு கைகளையும் தலைக்குமேல் உயர்த்தி, “நிம்மதி அடைந்துள்ளேன்,” என்று தக்சின் பதிலளித்தார்.
“நான் நீண்ட தூக்கத்தில் இருந்தேன். இப்போது எனக்கு எதுவுமே நினைவில் இல்லை,” என்றார் அவர்.
பதினைந்து ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தக்சின், 2023ல் தாய்லாந்து திரும்பினார். 2001 முதல் 2006 வரை பிரதமராக இருந்தபோது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, ஆதாயம் தரும் பதவிகளை வகித்தது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

