தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்

2 mins read
நோபெல் பரிசு பெற்ற அவருக்கு வயது 100
7b724045-cc09-4bfb-8188-86eab271ebb9
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், 100. - கோப்புப் படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரும் அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவருமான திரு ஜிம்மி கார்ட்டர், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) காலமானார். அவருக்கு வயது 100.

நிலக்கடலை பயிரிட்ட எளிய விவசாயி என்ற நிலையிலிருந்து அமெரிக்காவின் அதிபர் என்ற உயரிய நிலைக்கு உயர்ந்த உன்னத மனிதராக அவர் போற்றப்படுகிறார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரு கார்ட்டர், 1977ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் 39வது அதிபராகப் பதவியேற்றார்.

1981ஆம் ஆண்டு வரையிலான பதவிக்காலத்தில் மோசமான பொருளியல், ஈரானில் அமெரிக்கப் பிணைக்கைதிகள் நெருக்கடி போன்ற போராட்டங்களுக்கு இடையே அமெரிக்காவை வழிநடத்தினார்.

1978ஆம் ஆண்டு இஸ்‌ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே அமைதிக்கான சமரசப் பேச்சை அவர் முன்னின்று நடத்தினார். அது மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலைத்தன்மைக்கு வழிவகுத்தது.

பதவிக்காலத்தின் இறுதி 444 நாள்களில் பொருளியல் மந்தம், ஈரானில் அமெரிக்கப் பிணைக்கைதிகள் விவகாரம் போன்றவற்றால் திரு கார்ட்டரின் புகழ் மங்கியது. அதையடுத்து 1980ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் ரோனால்ட் ரீகனிடம் தோல்வியுற்றார்.

நீண்டகாலம் வாழ்ந்த அமெரிக்க அதிபர் என்ற சிறப்பு திரு ஜிம்மி கார்ட்டரைச் சாரும்.

அதிபர் பதவி வகிக்காதபோதும் மனிதநேயச் செயல்களுக்கான அவரது கடப்பாடு அவருக்குப் புகழ் சேர்த்தது.

வாழ்நாளின் பிற்பகுதியில் அமைதி, சுற்றுச்சூழல், மனித உரிமைகள் போன்ற அம்சங்களுக்காக அயராது உழைத்த அவரது பணியை மெச்சி 2002ஆம் ஆண்டில் திரு ஜிம்மி கார்ட்டருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

உலகத் தலைவர்கள் பலரும் திரு கார்ட்டருக்குப் புகழஞ்சலி செலுத்திவருகின்றனர்.

திரு கார்ட்டர் கொள்கை, நம்பிக்கை, பணிவு ஆகிய அம்சங்களுக்குப் பெயர்பெற்றவர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். தம்மைப் போன்றே உலகெங்கும் மில்லியன்கணக்கானோர் நல்ல நண்பரை இழந்ததாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் திரு டோனல்ட் டிரம்ப், அமெரிக்கர்கள் திரு கார்ட்டருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர் என்றார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைவர் அண்டோனியோ குட்டரஸ், திரு கார்ட்டரின் தலைமைத்துவம் அனைத்துலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியதாகப் புகழ்ந்துரைத்தார்.

எகிப்து, கனடா, பனாமா, வெனிசுவேலா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன், ஃபிரான்ஸ், உக்ரேன் போன்ற நாடுகளின் தலைவர்களும் மறைந்த திரு கார்ட்டருக்குத் தங்கள் இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இந்தியாவுடன் நல்லுறவு பேணிய திரு கார்ட்டர், 1977ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடிநிலை முடிவுற்று, ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியப் பயணம் மேற்கொண்டார்.

1978ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி திரு கார்ட்டரும் அவரது மனைவி ரோஸலின் கார்ட்டரும் புதுடெல்லிக்கு அருகே உள்ள தௌலத்பூர் நஸிராபாத் எனும் கிராமத்துக்குச் சென்றிருந்தனர். பின்னர் அந்தக் கிராமம் கார்ட்டர்புரி எனப் பெயர் மாற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்