மணிலா: ஓய்வூதியம் பெற்று வந்த 81 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவரின் உடல் காணாமல் போய்விட்டது. அவரின் எஞ்சிய உடல் பாகங்களுடன் சுமான்டோ என்ற ஆடவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
சுமான்டோ இந்தோனீசியாவின் மத்திய ஜாவாவில் 2003ஆம் ஆண்டில் அதிகாரிகளிடம் சிக்கியபோது, இறந்தவரின் உடலின் இறைச்சியை அவர் உண்டதாக நம்பப்படுகிறது.
சிறையில் மூன்று ஆண்டுகளைக் கழித்த அவர், விடுதலைக்குப் பின் தமது உள்ளூர் சமூகத்தினரால் ஒதுக்கப்பட்டார்.
இருப்பினும், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, சமூக ஊடகப் பிரபலமாக வலம் வரத் தொடங்கிவிட்டார் இவர்.
தன்முனைப்புப் பதிவுகள், உணவு குறித்த மதிப்பீட்டுக் கருத்துகள் ஆகியவற்றின் வழி அவர் மெல்லப் புகழடைந்து வருகிறார்.
இணையவாசிகளின் உள்ளங்களை இவர் கவர்ந்திழுத்தாலும் தம் உள்ளூர் சமூகத்தில் உள்ளோருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள காலம் கனியவில்லை என்றார்.
‘சாத்தே’ எனப்படும் நெருப்பில் வாட்டிய இறைச்சியை ருசிப்பது, விளையாட்டுகளிலும் கிராமப்புற நிகழ்வுகளிலும் பங்கேற்பது, நடனமாடுவது, பாடுவது, உடற்பயிற்சி செய்வது எனப் பலதரப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைக் காட்டும் தருணங்களை சுமான்டோ தமது இன்ஸ்டகிராம், டிக்டாக் தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
சர்ச்சைக்குரிய கடந்தகாலத்திலிருந்து அகன்று தற்போது இணையத்தில் பயன்தரும் வகையில் சுமான்டோ நடந்துகொள்ள முயற்சி எடுப்பதைச் சிலர் பாராட்டியும் வருகின்றனர்.