பெட்டாலிங் ஜெயா: 1எம்டிபி ஊழல் விவகாரத்துடன் தொடர்புடையவையாக இருந்து மலேசியாவுக்குத் திருப்பி ஒப்படைக்கப்பட்ட நான்கு ஓவியங்கள், அவற்றின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் நிறைவடைந்ததும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என மலேசியத் தேசியக் கலைக்கூடம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த நான்கு ஓவியங்களும் தேசியக் கலைக்கூடத்தின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டுவருவதற்கு முன்னதாக, தகுந்த பாதுகாப்போடு பேணப்பட்டு வருகின்றன.
ஓவியங்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்கு உகந்த நிலையில் இருப்பதை உறுதிசெய்ய, அவற்றுக்குப் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் எனக் கலைக்கூடம் குறிப்பிட்டுள்ளது.
கண்காட்சிக்கான தேதி இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில், இந்த ஓவியங்களைக் கூடிய விரைவில் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் இது குறித்த கூடுதல் விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் கலைக்கூடம் கூறியுள்ளது.
மேலும், தற்போதைய நிலையில் இந்த ஓவியங்களைப் பார்வையிடுவதற்கு நுழைவுக் கட்டணம் எதுவும் விதிக்கும் திட்டம் இல்லை என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது. இந்தக் கண்காட்சி கல்விசார் நோக்கத்தையும் கொண்டிருக்கும் என்றும் இதன் மூலம் பார்வையாளர்கள் கலை குறித்து மேலும் அறிந்துகொள்ள முடியும் என்றும் மலேசியத் தேசியக் கலைக்கூடம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் மலேசியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் எஞ்சிய எட்டு ஓவியங்களைப் பெற்று, பாதுகாத்து, நிர்வகிப்பதற்கு முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதாகத் தேசியக் கலைக்கூடம் தெரிவித்துள்ளது.
120 மில்லியன் ரிங்கிட்டுக்கும் (S$37.7 மில்லியன்) அதிகமான மதிப்புடைய அந்த எட்டு ஓவியங்களும், வெளிநாட்டு அதிகாரிகளின், குறிப்பாக அமெரிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இவ்வாண்டின் இறுதிக்குள் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த மே மாதம் அறிவித்திருந்தது.
