பாகிஸ்தான் மலையில் நான்கு சடலங்கள் கண்டுபிடிப்பு

பாகிஸ்தான் மலையில் நான்கு சடலங்கள் கண்டுபிடிப்பு

2 mins read
பத்துப் பேர் காணாமல்போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
a4ea2484-a9af-43a9-a206-7f970500265c
எவரெஸ்ட் உள்ளிட்ட ஆறு மலைகளை ஏறிய பிறகு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசினார் நிர்மல் புர்ஜா. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

காத்மாண்டு, பெஷாவர்: ‘புரோட் பீக்’ மலையில் வியாழக்கிழமை (ஜூலை 30) ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பனிச்சரிவில், குறைந்தது 10 மலையேறிகள் காணாமல்போனதைத் தொடர்ந்து, அவர்களில் நான்கு பேரின் சடலங்களைப் பாகிஸ்தான் மீட்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

உலகின் உயரமான 14 சிகரங்களை ஆக வேகமாக ஏறிச் சாதனை படைத்த 43 வயது நேப்பாள மலையேறி நிர்மல் புர்ஜா காணாமல்போனவர்களில் ஒருவர் எனப் பாகிஸ்தான் ஆல்பைன் மன்றம் கூறியுள்ளது.

உலகின் மிக உயரமான சிகரங்களில் 12ஆம் இடத்தில் இருக்கும் அந்த மலை 8,051 மீட்டர் உயரம் கொண்டது.

அந்த மலையில், வியாழக்கிழமை நண்பகலில் ஏற்பட்ட பனிச்சரிவில் அந்த மலையேறிகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

தேடல், மீட்புப் பணிகள் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்ததாகப் பாகிஸ்தானின் கில்கிட் - பால்டிஸ்தான் வட்டாரத்தின் சுற்றுப்பயணத் துறைத் துணை இயக்குநர் சாஜித் ஹுசேன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அந்தத் தேடல் பணிகள் தொலைதூர, கடினமான ஒரு பகுதியில் கவனம் செலுத்திவருவதாக அவர் கூறினார்.

கண்டுபிடிக்கப்பட்ட நான்கு சடலங்களும் இதுவரை இன்னமும் மீட்கப்படவில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், அவை எங்குக் காணப்பட்டன என்ற விவரங்களை அவை வெளியிடவில்லை.

பாகிஸ்தான் ராணுவ விமானப் பிரிவின் இரண்டு மீட்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

“காணாமல்போன மலையேறிகள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம்,” எனப் பாகிஸ்தான் ஆல்பைன் மன்றம் கூறியது.

குறிப்புச் சொற்கள்