ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மட்ரிட் நகரில் 1965ல் உருவான ஆறு மாடிக் கட்டடம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) இடிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து நான்கு சடலங்களை 15 மணி நேரம் கழித்து அவசர உதவிப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.
“மட்ரிட் நகரின் தீயணைப்பு வீரர்கள் கட்டடம் விழுந்த பிறகு காணாமல் போனவர்களின் சடலங்களை மீட்டுள்ளனர் என்பதை மிகுந்த வருத்தத்துடன் நாங்கள் உறுதிசெய்கிறோம்,” என்று அந்நகர மேயர் ஜோசே லுயிஸ் அல்மைடா எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.
இந்த விபத்தில் மாண்டவர்களில் கட்டடத்தில் மறுசீரமைப்புப் பணியில் ஈடுபட்ட 30 முதல் 50 வயதுக்குட்பட்ட மூன்று வெளிநாட்டு ஆடவர்களும் 30 வயது பெண் ஒருவரும் அடங்குவர். அந்தப் பெண் மறுசீரமைப்புத் திட்டத்தின் வடிவமைப்புக் கலைஞர் ஆவார்.
அந்த அலுவலகக் கட்டடம் 1965ல் கட்டிமுடிக்கப்பட்டது. அதன்பிறகு, 2012ஆம் ஆண்டிலும் 2022ஆம் ஆண்டிலும் இருமுறை சோதனையிடப்பட்டு, பல பகுதிகளிலும் வசதிகளிலும் குறைபாடுகள் நிறைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டுமுதல் சவூதி அரேபிய நிதி நிறுவனத்தின் சொத்தாகி, கட்டடம் நான்கு நட்சத்திர ஹோட்டலாக மறுவடிவம் பெற்றுவந்தது.