தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹிஸ்புல்லா தாக்குதலில் நால்வர் மரணம், பலர் காயம்

2 mins read
944fa88e-7605-4a30-b53e-d6519d541041
தாக்குதல் காரணமாக நால்வர் மாண்டதுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இஸ்‌ரேலிய அவசரகால சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ரூட்: இஸ்‌ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள தனது முகாம்களில் ஒன்றைக் குறிவைத்து ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்தி ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலில் நால்வர் மாண்டதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

தாக்குதல் காரணமாக 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இஸ்‌ரேலிய அவசரகால சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் திங்கட்கிழமை (அக்டோபர் 13) நிகழ்ந்தது.

லெபனான் மீது இஸ்‌ரேல் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது.

அதுமட்டுமல்லாது, லெபனானுக்குள் நுழைந்து ஹிஸ்புல்லா போராளிகளுடன் இஸ்‌ரேலிய ராணுவத்தினர் போரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்‌ரேலின் பின்யாமினா நகரில் உள்ள ராணுவப் பயிற்சி முகாம் மீது ஆளில்லா வானூர்தித் தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தியது.

செப்டம்பர் 23ஆம் தேதிக்குப் பிறகு இதுவே இஸ்‌ரேலிய ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல்.

இதற்கிடையே, இஸ்‌ரேல் மீது இதைவிட மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஹிஸ்புல்லா அமைப்பு சூளுரைத்துள்ளது.

லெபனானியத் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்‌ரேல் நடத்தும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாகப் பலர் மாண்டுவிட்டதாகவும் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்‌ரேலிய ராணுவப் பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அது கூறியது.

இது ஒருபுறம் இருக்க, தென்லெபனானில் உள்ள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அமைதிப் படை முகாமுக்குள் இஸ்‌ரேலியக் கவச வாகனங்கள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு ஐக்கிய நாட்டு நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனால் முகாமுக்குள் தமது படைகள் அத்துமீறி நுழையவில்லை என்றார் இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு.

அமைதிப் படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர்கள் அங்கு இருப்பதால் ஹிஸ்புல்லா படையினர் மீது தாக்குதல் நடத்த முடியவில்லை என்றார் நெட்டன்யாகு.

குறிப்புச் சொற்கள்