சாத்தம்: அமெரிக்காவில் பள்ளி நேரம் முடிந்து துணைப்பாட வகுப்புகள் நடைபெறும் ஒரு கட்டடத்துக்குள் ஏற்பட்ட வாகன விபத்தில் பிள்ளைகள் உள்பட நால்வர் மாண்டனர்; பலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் இலனோய் மாநிலத்தில் ஏற்பட்டது.
சாத்தம் நகரில் அமைந்துள்ள ‘ஒய்நொட்’ (YNOT) வளாகத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.20 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் மாண்டோர் 4 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்டோர் என்று நம்பப்படுகிறது.
வளாகத்துக்கு வெளியில் இருந்த பலர்மீது மோதிய வாகனம் வளாகத்துக்குள் புகுந்து மேலும் பலர்மீது மோதி பின் வளாகத்தின் மறுபுறம் வெளியானது. அது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
காயமுற்றோரில் பலர் அம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். வாகனத்தை ஓட்டியவருக்குக் காயம் இல்லை என்றும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் என்றும் இலனோய் மாநிலக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
வளாகத்துக்கு வெளியே வாகனம் மோதியதில் மூவர் உயிரிழந்தனர். மற்றவர்மீது வளாகத்துக்குள் வாகனம் மோதியதில் அவரும் உயிரிழந்தார்.
இணையத்தில் பதிவிடப்பட்ட படங்களில் கட்டடத்தில் பெரிய துவாரங்கள் உள்ளதைக் காண முடிகிறது. இச்சம்பவம் குறித்து தமது நிர்வாகம் கண்காணித்து வருவதாக இலனோய் ஆளுநர் ஜேபி பிரிட்ஸ்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

