ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் பல கொள்ளைச் சம்பவங்களுக்குக் காரணமான கும்பலைச் சேர்ந்த நால்வர் மீது மூன்று வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
33 வயது ஜி. பாலகிருஷ்ணன், 38 வயது பிரேம்குமார், 38 வயது ரித்வான் தினேஷ், 33 வயது பி. யுகேந்திரன் ஆகியோர் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொள்ளவில்லை.
முதல் நீதிமன்றத்தில் நால்வர் மீது கொள்ளைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஆகஸ்ட் 7ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் தாமான் முத்தியாரா ரினியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஜூலை 28ஆம் தேதியன்று தாமான் புக்கிட் இன்டாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்ததாக பாலகிருஷ்ணன், ரித்வான் தினேஷ், யுகேந்திரன் ஆகியோர் மீது இரண்டாவது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
ஆகஸ்ட் 6ஆம் தேதி அதிகாலை 7.30 மணி அளவில் தாமான் காயாவில் கும்பலாகக் கொள்ளையடித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
‘கேங் பாலா’ எனும் சட்டவிரோதக் கும்பலை முறியடித்துவிட்டதாக ஜோகூர் காவல்துறை ஆணையர் எம். குமார் செப்டம்பர் 2ஆம் தேதியன்று தெரிவித்தார்.
இந்தக் கும்பல் ஜோகூர் பாருவில் குறைந்தது 31 கொள்ளைச் சம்பவங்களைப் புரிந்ததாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கும் 26ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஆணையர் குமார் தெரிவித்தார்.
கைதானவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.


