தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்கக் கழிவறைத் திருட்டு: நால்வர்மீது குற்றச்சாட்டு

1 mins read
களவுபோய் நாலாண்டுகளாகியும் இன்னும் கிடைக்கவில்லை
0573685c-56c0-46c7-bd3c-d67bc53766c7
களவாடப்பட்ட தங்கக் கழிவறை. - படம்: ஊடகம்

லண்டன்: பிரிட்டனின் ஆக்ஸ்ஃபர்ட்ஷியரில் இருக்கும் பிலெனம் அரண்மனையிலிருந்து தங்கக் கழிவறையைக் களவாடியதாகத் திங்கட்கிழமை நால்வர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தத் திருட்டுச் சம்பவம் கடந்த 2019ஆம் தேதி செப்டம்பர் 14ஆம் தேதி அதிகாலையில் இடம்பெற்றது.

அந்த 18 கேரட் தங்கக் கழிவறையின் மதிப்பு ஐந்து மில்லியன் பவுண்டு (S$8.32 மில்லியன்) எனக் கூறப்பட்டது.

இச்சம்பவத்தின் தொடர்பில் 35 முதல் 39 வயதிற்குட்பட்ட நால்வர்மீது கொள்ளை மற்றும் குற்றவியல் சொத்துப் பரிமாற்றத்திற்குச் சதி செய்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இம்மாதம் 28ஆம் தேதி அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாவர் என பிபிசி செய்தி தெரிவித்தது.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரை மொத்தம் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆயினும், குற்றம் நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

களவுபோன தங்கக் கழிவறை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. களவுபோனபோது அது முழுமையான செயல்பாட்டில் இருந்தது.

அக்கழிவறை அரண்மனையின் குழாய்நீர் அமைப்புடன் இணைக்கப்பட்டிருந்ததால், அந்த 18ஆம் நூற்றாண்டு காலத்து அரண்மனையில் நீர் சூழ்ந்து, சேதமேற்பட்டதாகக் கூறப்பட்டது.

யுனெஸ்கோ மரபுடைமைப் பகுதியான அந்த அரண்மனையில்தான் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்