கோலாலம்பூர்: லஞ்சம் வாங்கிய சந்தேகத்தின் பேரில் ஜோகூரில் உள்ள மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் நான்கு அதிகாரிகளைக் கைதுசெய்துள்ளது. ஜோகூர்-சிங்கப்பூர் எல்லையில் அமைந்துள்ள மோட்டார் வாகன நுழைவுப் பகுதியின் சோதனைக்கூடத்தில் பணியிலிருந்தபோது அவர்கள் சுமார் 3,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்டது.
நால்வருமே 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆடவர்கள் என்றும் அவர்கள் ஆணையத்தின் ஜோகூர் அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கைது நடவடிக்கையின்போது 14 வெளிநாட்டுக் கடப்பிதழ்களும் நான்கு கைத்தொலைபேசிகளும் கிட்டத்தட்ட 3,000 ரிங்கிட் ரொக்கமும் கைப்பற்றப்பட்டன.
சம்பவம் “பறக்கும் கடப்பிதழ்” மோசடி என்று வர்ணிக்கப்பட்டது. ரொக்கமும் கைத்தொலைபேசிகளும் அதனுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக முதற்கட்டப் புலனாய்வில் தெரியவந்துள்ளது.
உரிமையாளர் இல்லாமல் அவருடைய கடப்பிதழில் பயணப் பதிவை உறுதிசெய்யச் சோதனைச்சாவடியில் இருந்த சந்தேக நபர்களுக்கு ஏறக்குறைய 200 ரிங்கிட் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சந்தேக நபர்கள் அனைவரும் ஜோகூர் பாரு மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஆணையம் கூறியது.

