தோக்கியோ: ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசப் படங்களை உருவாக்கி அதை விற்ற நான்கு நபர்களை ஜப்பானியக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
‘ஏஐ’ மூலம் ஆபாசப் படங்கள் தயாரித்தவர்கள் ஜப்பானில் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.
கைது செய்யப்பட்ட நால்வரின் வயது 20களிலிருந்து 50களில் இருக்கும் என்று ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்தன.
ஆடவர்கள் ஆபாசப் படங்களை உருவாக்கி அதை ஏலம் நடத்தும் ஒரு தளத்தில் விற்றுள்ளனர். அதன்மூலம் அவர்கள் சில ஆயிரம் டாலர்கள் சம்பாதித்தும் உள்ளனர்.
அண்மைக் காலமாக ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. பார்ப்பதற்கு உண்மையாக இருப்பது போலவே பல படங்கள் ‘ஏஐ’ மூலம் தயாரிக்கப்படுகின்றன.
படங்கள் போலவே காணொளிகளும் குரல் பதிவுகளும் வெளியிடப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் எளிதில் ஏமாறக்கூடிய சூழல் உருவாகி வருகிறது.
2019ஆம் ஆண்டு ஆய்வின் படி ‘டீப் ஃபேக்’ என்று அழைக்கப்படும் காணொளிகளில் 96 விழுக்காட்டுக் காணொளிகள் ஒருவரின் சம்மதம் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. அதில் பெரும்பாலானவை பெண்கள் தொடர்பான காணொளிகள்.