தோக்கியோ: மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது கரடி ஒன்றை எதிர்கொண்டதால் மூன்றரை மணி நேரம் மலையில் சிக்கிக்கொண்ட நால்வர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
அந்தச் சம்பவம் வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள ஒரு மலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 4) நிகழ்ந்தது.
அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் 2,141 மீட்டர் உயரமுற்ற மலையிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்த 60 வயது ஆடவர் ஒருவர், மலையேற்றப் பாதையில் ஏறத்தாழ 50 மீட்டர் தூரத்தில் பழுப்பு நிறக் கரடி ஒன்றைக் கண்டதாகக் கூறினார்.
அவர் இருந்த இடத்திற்கு வந்துசேர்ந்த மலையேறிகள் இதர மூவரும் அவ்வாறே கூறினர். அவர்களில் ஒருவர் மாலை 4.50 மணியளவில் அவசர உதவி எண்ணை அழைத்து, கரடியைக் கண்ட தங்களால் மலையில் தொடர்ந்து நகர முடியவில்லை என்று கூறினார்.
ஹொக்கைடோவில் உள்ள உலக இயற்கை மரபுடைமைத் தலமான ஷிரெடோகோ தீபகற்பத்தில் அமைந்துள்ள ரவுசு மலை, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) மலையேறிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட வேளையில் அதற்கு முந்தைய நாள் ஹொக்கைடோவின் மற்றொரு மலைப் பகுதியில் கரடி தென்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
26 வயது மலையேற்ற வீரர் ஒருவர் கடந்த ஆண்டு கரடி தாக்கியதில் உயிரிழந்ததைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டாக அந்த மலையேற்றப் பாதை மூடப்பட்டிருந்தது.

