கியவ்: உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்து நான்கு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் வேளையில் உக்ரேன் தலைநகர் கியவ்வில் பல இடங்கள் தாக்கப்பட்டன.
போர் தொடங்கி நான்காம் ஆண்டு நிறைவு நாளுக்கு இன்னும் இரு நாள்கள் இருக்கும் வேளையில் கியவ்வில் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) அதிகாலை நான்கு மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி காலை 10 மணி) ஏஎஃப்பி செய்தியாளர்கள் பலமுறை வெடிப்புச் சத்தம் கேட்டனர். ஆகாயத் தாக்குதல் நடக்கவிருப்பதற்கான எச்சரிக்கை ஒலி அதற்கு முன்னர் கேட்கப்பட்டது.
அந்த எச்சரிக்கை பின்னர் நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டது. ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பதற்காக எச்சரிக்கை விரிவுபடுத்தப்பட்டது.
“பாலிஸ்டிக் ஆயுதங்களைக் கொண்டு எதிரிகள் தலைநகர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்,” என்று கியவ்வின் ராணுவ நிர்வாகத் தலைவர் டிமுர் காச்செங்கோ டெலிகிராம் செயலியில் தெரிவித்தார். தொடர்ந்து பாதுகாப்புப் பகுதிகளில் இருக்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
குடியிருப்புப் பகுதிகளில் காயமடைந்த ஒரு மாதும் ஒரு குழந்தையும் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கியவ் மேயர் விட்டாலி கிளிட்ஸ்கோ டெலிகிராமில் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ரஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்தது. அப்போதிருந்து ரஷ்யப் படைகள், உக்ரேனியத் தலைநகர் மீது அடிக்கடி ஏவுகணை, வானூர்தித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
கடந்த சில வாரங்களாக இரவைத் தாண்டியும் தொடரும் பல தாக்குதல்களை கியவ் எதிர்நோக்கி வந்துள்ளது. எரிசக்தி, ராணுவக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கியவ் தாக்கப்பட்டபோது வெப்பநிலை கிட்டத்தட்ட பூஜ்யத்துக்குக் கீழ் 10 டிகிரி செல்சியஸ் குறைந்திருந்தது. நகரம் முழுவதும் அவசரச் சேவைகளை வழங்கப் பணிகள் இடம்பெற்றன.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக உக்ரேனின் தெற்குப் பகுதி வரை நாடு முழுவதும் அதிக விழிப்புநிலையில் இருந்தது.

