தைப்பே: ‘ஃபாக்ஸ்கான்’ நிறுவனம் உலகின் ஆகப் பெரிய ‘என்விடியா’ சில்லு உற்பத்தி ஆலையைக் கட்டுகிறது.
செயற்கை நுண்ணறிவுத் தளமான ‘பிளேக்வேல்’க்கு பேரளவில் எழுந்துள்ள தேவையைப் பூர்த்தி செய்ய உதவுவதே நோக்கம் என்று அந்தத் தைவானிய நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.
உலகின் ஆகப் பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனமான ‘ஃபாக்ஸ்கான்’, ஆப்பிள் நிறுவனத்தின் ஆகப் பெரிய ஐஃபோன் தயாரிப்பாளராகவும் உள்ளது. செயற்கை நுண்ணறிவு மிகப் பிரபலமடைந்துவரும் இக்காலகட்டத்தில், சேவை வழங்கிகளையும் (servers) தயாரிப்பதால் அந்நிறுவனம் அதிகப் பலனடைந்துள்ளது.
‘என்விடியாவுக்கும்’ தமது நிறுவனத்துக்கும் இடையிலான பங்காளித்துவம் மிக முக்கியம் என்று ‘ஃபாக்ஸ்கான்’ மேகக் கணினியல் தொழில்நிறுவனத் தீர்வுகள் வர்த்தகக் குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் பெஞ்சமின் டிங் கூறினார்.
“இந்தக் கிரகத்தின் ஆகப் பெரிய ‘ஜிபி200’ உற்பத்தி ஆலையைக் கட்டுகிறோம். ஆனால் இப்போதைக்கு அதனை எங்கு கட்டுகிறோம் என்பதை என்னால் சொல்ல முடியாது,” என்று தைப்பேயில் நடைபெற்ற அந்நிறுவனத்தின் வருடாந்தரத் தொழில்நுட்பத் தின நிகழ்ச்சியில் அவர் கூறினார்.
அனைவரும் ‘பிளேக்வேல்’ தளத்தைக் கேட்பதாகக் கூறிய திரு டிங், “அதற்கான தேவை பேரளவில் உள்ளது,” என்றும் சொன்னார்.
அவர் ‘என்விடியா’வின் செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியலுக்கான துணைத் தலைவர் தீப்பு தல்லாவுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார்.