தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முரசுக்களம்: பிளவுபட்ட ஜப்பானிய ஆளுங்கூட்டணி; ஆட்டங்காணும் பிரதமர் கனவு

2 mins read
556bd156-38d6-4008-a95a-68417d0f3f09
நாடாளுமன்றத்தில் ஆகப்பெரும் கட்சியாக எல்டிபி இன்னும் உள்ளதாலும் எதிர்க்கட்சிகள் தங்களுக்கிடையே பிளவுபட்டு இருப்பதாலும் திருவாட்டி தக்காய்ச்சியின் பிரதமர் கனவு கலைந்ததாகவும் இதுவரை கூற முடியாது.  - படம்: செயற்கை நுண்ணறிவு

ஜப்பானின் ஆளுங்கட்சியான எல்டிபி எனப்படும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக, அந்நாட்டின் பெண் அரசியல்வாதி சனேய் தக்காய்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருந்தபோதும், அவரது கட்சி தற்போது வழிநடத்தும் கூட்டணியிலிருந்து கொமெய்த்தோ கட்சி வெளியாகியுள்ளதை அடுத்து அவர் பிரதமராகும் வாய்ப்பு குறைந்துள்ளது. 

ஜப்பானிய நாடாளுமன்றத்தில் 24 இடங்களைக் கொண்டுள்ள கொமெய்த்தோவின் வெளியேற்றத்திற்குப் பிறகு அந்நாட்டிலுள்ள 465 இடங்களில் தற்போது எல்டிபிக்கு 196 இடங்களே உள்ளது. 

நாடாளுமன்றத்தில் ஆகப்பெரும் கட்சியாக எல்டிபி இன்னும் உள்ளதாலும் எதிர்க்கட்சிகள் தங்களுக்கிடையே பிளவுபட்டு இருப்பதாலும் திருவாட்டி தக்காய்ச்சியின் பிரதமர் கனவு கலைந்ததாகவும் இதுவரை கூற முடியாது. 

காலஞ்சென்ற ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயின் நெருங்கிய நண்பரான திருவாட்டி சனேய், அவரது அரசியல் கொள்கைகளைத் தழுவியிருக்கிறார். ஜப்பானுக்கு அதிக அளவு கடன், பணவீக்கம், ஊதியத் தேக்கம் ஆகியவை தற்போது நிலவி வருகையில் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி ஒருபக்கம். திருவாட்டி தக்காய்ச்சி, பழமைவாதியாகக் கருதப்படுகிறார். இரண்டாம் உலகப் போர்க் குற்றவாளிகளின் கல்லறைகளைக் கொண்ட யாசுகுனி தலத்தை ஆதரிப்பவர். பொருளியல் வளர்ச்சியை முடக்குவதற்காக திரு அபே செய்திருந்த அரசாங்கச் செலவுகளை இவரும் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை சீனாவை எதிர்ப்பதற்காக அமெரிக்கா, இந்தியா, தென்கிழக்காசியா ஆகியவற்றுடன் திருவாட்டி தக்காய்ச்சி கூடுதல் அணுக்கத்தைப் பாராட்டக்கூடும் – அவர் பிரதமரானால்.  திருவாட்டி தக்காய்ச்சின் கருத்தியல், கொமெய்த்தோவின் சமூகக் கொள்கைக் கோட்பாடுகளுக்கு முரணாக இருப்பதாலும் அரசியல் நிதி தொடர்பில் எழுந்த சர்ச்சையை அவர் அணுகிய விதம் குறித்த அதிருப்தியாலும் அவரை ஆதரிக்கப்போவதில்லை என்று கொமெய்த்தோ தெரிவித்தது.  எதை எதிர்க்கிறார்கள் என்பதை நன்கு தெரிந்துள்ள இந்தக் கட்சிகள், எதை ஆதரிக்கின்றனர் என்பது தற்போதைய நிலவரப்படி தெளிவாக இல்லை.

இவருக்குப் பதிலாக மற்றொருவரைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். அடுத்த சில நாள்களில் புதிதாக வந்த ஒருவருக்கு அனைவரது ஆதரவும் இல்லாவிட்டால் பெரும்பான்மையற்ற, வலுவிழந்த அரசாங்கத்தைத் திருவாட்டி தக்காய்ச்சி பிரதமராக வழிநடத்த வேண்டும்.

குறிப்புச் சொற்கள்