ஒயின் அழிப்பு: மில்லியன்கணக்கில் செலவிடும் பிரான்ஸ்

ஒயின் அழிப்பு: மில்லியன்கணக்கில் செலவிடும் பிரான்ஸ்

1 mins read
8683dae0-87a2-45ad-bdc3-39fd249f916e
வாழ்க்கைச் செலவின நெருக்கடியால் மக்கள் அவதியுறும் வேளையில், பிரான்சில் உள்ள சில முக்கிய ஒயின் தயாரிப்பு வட்டாரங்கள் சிக்கலை எதிர்நோக்குகின்றன. - படம்: இபிஏ

பாரிஸ்: பிரான்சில் அளவுக்கதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட ஒயின் பானத்தை அழிப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் 200 மில்லியன் யூரோ ($293 மில்லியன்) நிதியை ஒதுக்கியுள்ளது.

உற்பத்தியாளர்களுக்கு உதவுவதும் ஒயின் விலை மிகவும் குறைவதைத் தடுக்க முயல்வதும் இதன் நோக்கங்கள்.

பயனாளர்களின் பழக்கவழக்கங்களில் மாற்றம், வாழ்க்கைச் செலவின நெருக்கடி, கொவிட்-19 கிருமிப் பரவலின் தாக்கம் போன்ற காரணங்களால் பிரான்சில் உள்ள சில முக்கிய ஒயின் தயாரிப்பு வட்டாரங்கள் சிக்கலை எதிர்நோக்குகின்றன.

தேவை குறைந்ததால், உற்பத்தி அளவுக்கதிகம் என்ற நிலையை எட்டியுள்ளது.

ஒயின் பானத்தின் விலையும் வெகுவாகக் குறைந்ததால் ஒயின் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற போர்டோ வட்டார உற்பத்தியாளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் நிதிச் சிக்கலை எதிர்கொள்வதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், அளவுக்கதிகமான ஒயின் பானத்தை அழிப்பதற்கு அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பதாக பிரெஞ்சு வேளாண் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்