பாரிஸ்: பிரான்ஸ் அரசாங்கம், பாரிசிலும் மற்ற நகரங்களிலும் திங்கட்கிழமை (அக்டோபர் 19) பகுதிநேர ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது.
கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் விலையேற்றத்தைக் கண்டித்து வார இறுதியில் நடத்தப்பட்ட போராட்டங்கள், அண்மை ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான வன்முறையாக மாறியது.
காவல்துறையினர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக உள்துறை அமைச்சர் கூறிய பிறகு, அவசரநிலையை நடைமுறைப்படுத்தும் யோசனையை நிராகரிப்பதற்கு இல்லை என்று அந்நாட்டுப் பிரதமர் செபாஸ்டியன் லுகோர்னு கூறினார்.
மாணவர்கள் சிலர் செய்த ஆர்ப்பாட்டங்களால் உலகப் புகழ்பெற்ற லூவ அரும்பொருளகம் மூடப்பட்டிருந்தது. அதனால் பாரிசுக்குச் சென்ற சுற்றுப்பயணிகள், இடையூற்றைச் சந்திக்க நேரிட்டது.
பிரெஞ்சு அரசாங்கம், வன்முறையை முன்னரே கணிக்கத் தவறிவிட்டது என்றும் சரியான முறையில் அதனைக் கையாளவில்லை என்றும் குறைகூறப்படுகிறது. சட்ட ஒழுங்கு மீண்டும் நிலைநிறுத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அதே வேளையில், அதிகாரிகளும் பொதுமக்களின் சினத்தைக் தணிக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வரும் சனிக்கிழமை மீண்டும் போராட்டத்திற்கு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தற்போதைய அதிபர் இமானுவல் மெக்ரோனுக்குப் பிறகு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் பிரான்சில் வன்முறை வெடித்துள்ளது.
வணிகங்களைப் பாதுகாக்கப் பாரிஸ், லீல், லியோன் உள்ளிட்ட பல நகரங்களில் திங்கள் மாலை முதல் செவ்வாய் காலை வரை பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.
சனிக்கிழமை நடந்த சூறையாடலைத் தொடர்ந்து, இணைய மறுவிற்பனைத் தளங்களில் ‘திருடப்பட்ட பொருள்களின்’ பட்டியல்களை நீக்குமாறு பிரான்சின் மின்னிலக்க அமைச்சர் ஆன் லெ ஹெனாஃப் வலியுறுத்தினார்.
வார இறுதிக் கலவரங்களுக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் பதவி விலக முன்வந்தார். ஆனால் திரு மெக்ரோன் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
கலவரத்தின்போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; போராட்டக்காரர்களும் காயமுற்றனர். அதன் தொடர்பில், 2,500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை 60,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டபோதிலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருந்ததை பிரெஞ்சு அதிபர் ஒப்புக்கொண்டார்.
ஏறக்குறைய 3,000 கடைகள் சேதமடைந்தன. இதனால் பல நூறு மில்லியன்கணக்கான யூரோ இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடற்ற வன்முறையைத் திரு மெக்ரோன் கடுமையாகக் கண்டித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம், இந்த வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியது. ஆனால், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை பிரான்சில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அது குறிப்பிட்டது.
ஜெர்மனி இந்த வன்முறையைக் கண்டித்ததோடு, பிரான்சுக்கான தனது பயண ஆலோசனையை வெளியிட்டது. வரவிருக்கும் நாள்களில் மேலும் வன்முறை வெடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று அது தெரிவித்தது. சீனாவும் பிரான்சில் நடக்கும் கலவரம் குறித்துக் கருத்துரைத்துள்ளது. அங்குப் பயணம் செல்லும் தனது குடிமக்கள் ஆபத்தை அறிந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சீனாவின் அரசாங்க ஒளிபரப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டது.
