பாஸ்டன்: உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மொரோக்கோவை 2-0 என்ற எண்ணிக்கையில் வீழ்த்தி அரை இறுதிச் சுற்றை நோக்கி முன்னேறியுள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடந்த ஆட்டத்தில் கிலியான் இம்பாப்பே, உஸ்மான் டெம்பெலே இருவரும் ஆட்டத்தின் 60ஆம் நிமிடத்திலும் 66வது நிமிடத்திலும் ஆறு நிமிட இடைவேளிக்கு இடையில் இரண்டு கோல்களைப் புகுத்தினர்.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒரே பிரதிநிதியாக உலகக் கிண்ணப் போட்டியில் கால் இறுதிவரை வலம்வந்த மொரோக்கோ அணியினர் பிரான்ஸ் குழுவின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் தோல்வியைத் தழுவினர்.
இருப்பினும் மொரோக்கோவின் ஆதரவாளர்கள் உலகக் கிண்ண போட்டித் தொடரில் இதுவரையில் அவர்கள் மேற்கொண்ட முயற்சியை எண்ணி அந்த அணிக்கு ஆதரவாக பாராட்டுகளையும் புகழாரத்தையும் சூட்டி மகிழ்ந்தனர்.
ஆட்டத்தின் முதல்பாதியில் 28ஆம் நிமிடத்தில் பிரான்சுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை இம்பாப்பே அச்சரியமாக தவறாக உதைத்து, கோல்போடும் வாய்ப்பை நழுவ விட்டார். இருந்தாலும் அதற்கு ஈடாக அவர் இரண்டாம் பாதியில் மிகத் திறமையாக முதல் கோலைப் போட்டு, அரையிறுதிச் சுற்றை பிரான்ஸ் நெருங்கிட பாதை அமைத்தார்.
இதோடு, பிரான்ஸ் அணி 2018, 2022 என 2026ஆம் ஆண்டிலும் தொடர்ந்து மூன்றாம் முறையாக உலகக் கிண்ண அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.
இதர மூன்று கால் இறுதி ஆட்டங்கள்
மீதம் உள்ள மூன்று கால் இறுதி ஆட்டங்களில் ஒன்றில் சனிக்கிழமை (ஜூலை 11) ஸ்பெயின் குழு பெல்ஜியத்தைச் சந்திக்கிறது.
அந்த ஆட்டத்தின் வெற்றியாளர்களை எதிர்பார்த்து பிரான்ஸ் அணி அரை இறுதிச் சுற்றில் காத்திருக்கிறது.
அதன்பிறகு நார்வே இங்கிலாந்து அணிகளும், அர்ஜெண்டீனா சுவிட்சர்லாந்து குழுக்களும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) மோதவுள்ளன. அடுத்துவரும் ஆட்டங்கள், உலகக் கிண்ணத்தை வெல்லப்போகும் குழு யார் என்பதை அடையாளம் காட்டுமா என்று சிறிது காத்திருந்து அறிந்துகொள்ளலாம்.

