பாரிஸ்: பிரான்சுக்கான அமெரிக்கத் தூதர் சார்லஸ் குஷ்னருக்கான அதிகாரபூர்வ அணுகலை மீண்டும் வழங்கவுள்ளதாகப் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
பிரான்சின் உள்நாட்டு விவகாரங்களில் தான் தலையிடத் திட்டமிடவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட்விடம் திரு குஷ்னர் உறுதியளித்ததை அடுத்து அம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
லியோன் நகரில் கொல்லப்பட்ட தீவிர வலதுசாரி ஆர்வலர் குறித்த விவகாரத்தில், அமெரிக்காவின் கருத்து குறித்து அறிய திரு குஷ்னருக்கு நேரில் வரும்படி பிரான்ஸ் அரசு அழைப்பு விடுத்திருந்தது.
அவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க அவர் நேரில் வராததைத் தொடர்ந்து அவருக்கு அந்நாட்டு அமைச்சர்களைச் சந்திக்க பிரான்ஸ் அரசு பிப்ரவரி 23ஆம் தேதி தடை விதித்தது.
அதனையடுத்து, திரு குஷ்னரும் திரு பரோட்டும் பிப்ரவரி 24ஆம் தேதி தொலைபேசியில் உரையாடினர்.
அதில், இருதரப்பு பணிகளைத் தொடர்வதற்காக வரும் நாள்களில் இருவரும் சந்திக்க உள்ளதாகப் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சின் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்தது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு எந்தவொரு கருத்தும் வெளியிடவில்லை.

