மோசடி: மலேசியாவில் 358 பேர் கைது, 11 கும்பல்கள் முடக்கம்

மோசடி: மலேசியாவில் 358 பேர் கைது, 11 கும்பல்கள் முடக்கம்

2 mins read
741e0d5d-cd67-4b94-8681-3744b4df73e2
ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அதிரடி நடவடிக்கை நடத்தப்பட்டது என்றார் புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ருஸ்டி முகம்மது ஈசா கூறினார். - படம்: பிக்சாபே

கோலாலம்பூர்: மின்வர்த்தக மோசடிக் கும்பல்களைக் குறிவைத்து நாடளாவிய அளவில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மலேசியக் காவல்துறையினர் 358 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் 11 கும்பல்களை முடக்கியுள்ளனர்.

ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அதிரடி நடவடிக்கை நடத்தப்பட்டது என்றார் புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ருஸ்டி முகம்மது ஈசா கூறினார்.

“பகுதி நேர வேலை வாய்ப்புகள் மற்றும் மின்வர்த்தக மோசடிகள் உள்ளிட்ட இணைய மோசடிகளின் அபாயகரமான அளவிலான அதிகரிப்புக்கு உறுதியான பதிலடியாக இது அமைந்துள்ளது,” என்று அவர் செவ்வாய்க்கிழமையன்று (மே 5) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மலேசியாவின் பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளை உள்ளடக்கிய ஓர் ஒருங்கிணைந்த நாடளாவிய முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

அமலாக்க முயற்சிகள் குற்றவாளிகள்மீது மட்டுமின்றி, மோசடிகளைத் தக்கவைக்கும் பரந்த அமைப்பை, குறிப்பாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் நிதிக் கட்டமைப்புகளை அகற்றுவதிலும் கவனம் செலுத்துவதாக திரு ருஸ்டி கூறினார்.

நாடளாவிய அளவில் இயங்கி வந்த 11 கும்பல்களின் செயல்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 45 முக்கிய நபர்களை அடையாளம் காணவும் இந்த அதிரடி நடவடிக்கை உதவியதாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 247 பேர் ஆண்கள், 111 பேர் பெண்கள் என்று தெரிய வந்துள்ளது.

பெருகிவரும் சிக்கலான மோசடிக் கும்பல்களைச் சமாளிப்பதில் உளவுத்துறை அடிப்படையிலான காவல் நடவடிக்கைகள் மற்றும் துறைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பின் செயல்திறனை இந்த நடவடிக்கை பிரதிபலிப்பதாகத் திரு ருஸ்டி கூறினார்.

இணைய மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்குத் துணைபுரிபவர்கள் இருவரையும், குறிப்பாக, தங்களின் எல்லையை விரிவுபடுத்த மின்னிலக்கத் தளங்களைப் பயன்படுத்துபவர்களை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளைக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிரப்படுத்துவார்கள் என்று அவர் வலியுறுத்தினார்.

“இந்தக் கும்பல்கள் வேகமாக உருமாறி வருகின்றன. அவை திறம்பட முடக்கப்படுவதை உறுதிசெய்ய அதற்கேற்ப எங்களது அமலாக்க உத்திகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்