ஒருங்கிணைந்த ஒத்துழைப்பால் சிக்கிய மோசடிக் கும்பல் தலைவர்கள்

2 mins read
1830a4b6-a744-4e96-875d-a36b1b44cc9a
(இடது) கம்போடியச் செல்வந்தர் சென் சி, மியன்மார் செல்வந்தர் ‌ஷி சிஜியாங் ஆகியோர் மோசடிக் கும்பல் தலைவர்களாகச் செயல்பட்டனர். - படங்கள்: பிரின்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமம், ஏஎஃப்பி

கம்போடிய செல்வந்தர் சென் சி, மியன்மார் செல்வந்தர் ‌ஷி சிஜியாங், வர்த்தகத் தலைவர் பாய் சுவோசெங் ஆகிய பல மோசடிக் கும்பல் தலைவர்கள் ஒரு கட்டத்தில் தொட முடியாத நிலையில் இருந்தனர்.

அரசாங்கத் தலைவர்களுடன் அடிக்கடி உறவாடும் அவர்கள் தைரியமாகச் சொத்துகளை முன்னிலைப்படுத்தினர்.

2022ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை இணையக் குற்றக் கும்பல்களை நடத்திய அவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டனர். அத்தகையோரால் பாதிக்கப்பட்டோர் உலகளவில் $1 டிரில்லியன் டாலர் பணத்தை இழந்துள்ளனர்.

மியன்மாரில் மோசடி நிலையங்களை நடத்தியதற்காகச் சீனாவிலிருந்து 2024ஆம் ஆண்டு நாடுகடத்தப்பட்ட பாய் சுவோசெங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டிலிருந்து ‌‌ஷியைத் தடுப்புக் காவலில் வைத்திருந்த தாய்லாந்து, கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவிடம் ஆடவரை ஒப்படைத்தது.

சீனாவைச் சேர்ந்த லின் ‌ஷுன்ஹன்னுக்குச் சொந்தமான $19 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகளைப் பிரிட்டனும் அமெரிக்காவும் முடக்கின.

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்ட அமலாக்க அமைப்புகளின் வலுவான ஒத்துழைப்பால், குறைந்தது ஐந்து மோசடிக் கும்பல்களின் தலைவர்கள் சிக்கினர்.

குற்றச்செயல்கள் குறித்த தெளிவான புரிதல், இன்னும் பல நாடுகளுக்கு இடையிலான அனைத்துலக ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது என்றும் பல நாடுகள் மோசடியைத் தேசிய அளவிலான பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன என்றும் இன்டர்போல் நிதிக் குற்றங்கள் நிலைய இயக்குநர் திரு நிக்கலஸ் கோர்ட் தெரிவித்தார்.

நாடுகள் தகவல்களை இன்னும் துரிதமாகப் பகிர்ந்துகொண்டு ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டன என்றார் அவர்.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மோசடியில் ஈடுபட்ட சென் தொடர்பில் அதிகாரிகள் தீவெங்கும் நடத்திய சோதனை நடவடிக்கையில் ஆறு சொத்துகளுடன் 11 வாகனங்களும் $150 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னின் பிற சொத்துகளைத் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த வாரங்களில் முடக்கின.

குறிப்புச் சொற்கள்