சிங்கப்பூரின் ஆக உயரிய காவல்துறை ஆணையரின் பெயரில் மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மோசடிக்காரர்கள் அவ்வாறு அனுப்பும் மின்னஞ்சல்களை நம்பவேண்டாம் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) அறிவித்துள்ளது. இந்த வகையான மோசடியில், பாதிப்படைந்தோருக்குக் காவல்துறை ஆணையரின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்வோர் மின்னஞ்சல் அனுப்புவர்.
அந்த மின்னஞ்சலைப் பெறுபவர், குற்றங்களில் ஈடுபட்டுள்ளதை காவல்துறையும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் நடத்திய விசாரணையில் கண்டறிந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
எச்சரிக்கைக் கடிதமாக வடிவமைக்கப்பட்டு, பெறுநர் ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பும்படி அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கும். அப்படி செய்யவில்லை என்றால் கைது உள்பட பல விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கும்.
காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், காவல்துறையோ மற்ற அரசாங்க அதிகாரிகளோ எவ்வித மின்னஞ்சல்களையும் அனுப்பவில்லை என்று உறுதிப்படுத்தியது.
பொதுமக்களிடம் அரசாங்க அதிகாரிகள் ஒருபோதும் பணப் பரிவர்த்தனை செய்யும்படி, வங்கி கணக்குகளின் மறைச்சொல் கொடுக்கும்படி, அதிகாரபூர்வமற்ற தொலைபேசி செயலிகளை பதிவிறக்கம் செய்யும்படி கேட்டுக்கொள்ளமாட்டார்கள் என்று காவல்துறை நினைவூட்டியது.
அதோடு, தொலைபேசி அழைப்பை மற்ற அதிகாரிகளுக்கும் அவர்கள் மாற்றுவதாகக் கூறமாட்டார்கள் என்றும் அது கூறியது. அடையாளம் தெரியாதோரிடம் பணம் நேரில் கொடுப்பது, பணப்பரிவர்த்தனை செய்வது, மின்னிலக்க நாணயங்கள் அல்லது விலை உயர்ந்த பொருள்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனக் காவல்துறை கேட்டுக்கொண்டது.
பணத்தையும் விலைமதிப்புள்ள பொருள்களையும் அறியாதவர் ஒருவர் எடுத்துச்செல்லும் வகையில் எவ்விடத்திலும் வைத்துவிட்டுச் செல்லவேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

