ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ பள்ளிகளில் வழங்கப்படும் இலவச உணவுத் திட்டத்தின் தலைமை அதிகாரியைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
பள்ளிகளில் வழங்கப்படும் இலவச உணவுத் திட்டம் தேசிய ஊட்டச்சத்து அமைப்பின்கீழ் வருகிறது.
டடான் ஹின்டாயன் தேசிய ஊட்டச்சத்து அமைப்பை வழிநடத்தி வந்தார். தற்போது அவர் நீக்கப்பட்டுவிட்டார். புதிய தலைவராக நானிக் சுடர்யதி டேயாங் பொறுப்பேற்றுள்ளார். இதற்குமுன் அவர் அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார்.
அதிபர் பிரபோவோவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாகப் பள்ளி இலவச உணவுத் திட்டம் இடம்பெற்றது. அதற்காகப் பல பில்லியன் வெள்ளி நிதியை அவர் ஒதுக்கியுள்ளார்.
இருப்பினும், பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் உணவைச் சாப்பிட்டு பலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அந்தத் திட்டத்தில் ஊழல் நடப்பதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. தரமில்லா உணவைக் கொடுப்பதால்தான் நச்சுணவு சம்பவங்கள் பதிவாவதாகக் குறைகூறப்பட்டது.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகளில் இலவசமாக உணவு வழங்கும் திட்டம் தொடங்கியது. மார்ச் மாதத்திற்குள் அந்தத் திட்டம் 61 மில்லியன் மக்களுக்குமேல் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பள்ளிகளில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட ஆயிரக்கணக்கானவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது அந்தத் திட்டத்தின் தலைமை அதிகாரியை அதிபர் பிரபோவோ மாற்றியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
உணவுச் சுகாதாரம் சரியில்லை, ஊழல் எனக் காரணங்களைக் கூறி பள்ளிகளில் வழங்கப்படும் இலவச உணவுத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், “பள்ளிகளில் வழங்கப்படும் இலவச உணவுத் திட்டம் தொடரும். உணவின் தரம், சுத்தம் உள்ளிட்டவை சரியாக இருப்பதை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும்,” என்று தேசிய ஊட்டச்சத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

