இந்தோனீசியாவில் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை திட்டம் அறிமுகம்

2 mins read
9dc24a5e-a4ef-474c-a941-874cfd135a62
சுரபாயாவில் உள்ள ஒரு சமூக சுகாதார நிலையத்தில் முதல் நாளான பிப்ரவரி 10ஆம் தேதி இலவச மருத்துவ சோதனை செய்துகொண்ட மக்களிடம் உரையாடிய சுகாதார அமைச்சர் புடி குனாடி சடிகின் (நடுவில்). - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியா, ஆரம்பத்திலேயே நோய்களைக் கண்டறிந்து மரணங்களைத் தடுப்பதற்காக மூன்று டிரில்லியன் ருப்யா (S$247 மில்லியன்) செலவில் நாடு முழுவதும் இலவச மருத்துவ பரிசோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது, மிகப்பெரிய முயற்சி என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு பிப்ரவரி 10ஆம் தேதியன்று தெரிவித்தது

இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து இந்தோனீசியர்களும் அவர்களது பிறந்த நாளில் இலவச மருத்துவ பரிசோதனைக்குத் தகுதி பெறுவார்கள்.

ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினை, பக்கவாதம் ஏற்படும் ஆபத்தைக் கண்டறியும் சோதனைகள், கண்பரிசோதனை உள்ளிட்டவை மருத்துவ சோதனையில் அடங்கும்.

ஆனால், இது கட்டாயமல்ல என்று அமைச்சு கூறியுள்ளது.

தொடக்கமாக, ஆறு வயதுக்கு உட்பட்ட, பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் புடி குனாடி சடிகின் கடந்த வாரம் ராய்ட்டர்சிடம் தெரிவித்திருந்தார்.

உலகில் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட இந்தோனீசியாவில் பக்கவாதம், இதயப் பிரச்சினை, காசநோய் போன்றவை மரணங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் காட்டுகின்றன.

இந்நிலையில் அதிபர் பிரபாவோ சுபியாந்தோ, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்குவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளுக்கு நிதியளிப்பதற்காக செலவுகளை குறைக்க உத்தரவிட்டார்.

இதனால் ஆரம்பத்தில் திட்டமிட்டதைவிட சுமார் 1 டிரில்லியன் குறைவாக இலவச மருத்துவ பரிசோதனைக்கு மூன்று டிரில்லியன் ருப்யா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜகார்த்தாவில் உள்ள சுகாதார நிலையத்தில் திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளான பிப்ரவரி 10ஆம் தேதி 30க்கும் மேற்பட்டோர் இலவச பரிசோதனைக்குப் பதிந்துகொண்டனர்.

அவர்களில் 33 வயது ஆசிரியையான ரமிகா தேவி சரகி, மார்பகப் புற்றுநோய், கண்கள் மற்றும் பலவற்றையும் பரிசோதித்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.

இந்த வாய்ப்பை பலரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே இவ்வாண்டு 100 மில்லியன் மக்களை இலக்காகக் கொண்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இந்தோனீசியர்களுக்கு நோய்கள் இருப்பதை முன்னரே கண்டறிவதால் அவற்றுக்கான தடுப்பு சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கத்துடன் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் புடி மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்