தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியப் பள்ளிகளில் இலவச உணவு; சமையலறைச் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்

2 mins read
f706f216-e219-40de-97f0-786a285469b1
இந்தோனீசியப் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச உணவு. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசிய அரசாங்கம், பள்ளிகளில் இலவச உணவு வழங்குவதற்கான திட்டத்தில் ஈடுபடும் சமையலறைகளின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

அண்மையில் பள்ளி இலவச உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட நச்சுணவுச் சம்பவங்கள் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும், தேசிய அளவில் இத்திட்டம் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நச்சுணவுச் சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க மேலும் அணுக்கமாகக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

பிள்ளைகளுக்குக் கூடுதல் ஊட்டச்சத்து அளிக்கும் நோக்குடன் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் இலவசப் பள்ளி உணவுத் திட்டத்தை அந்நாட்டின் தேசிய உணவு அமைப்பு நடத்துகிறது. அந்த அமைப்பு, பல்வேறு வட்டாரங்களில் இத்திட்டத்தில் பங்கேற்கும் சமையலறைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு பள்ளி இலவச உணவுத் திட்டம் நடப்புக்கு வந்தது.

“அண்மையில் நிகழ்ந்த நச்சுணவுச் சம்பவங்களைத் தொடர்ந்து இலவச உணவு தயார்செய்யும், பிரச்சினைகள் இருக்கும் சமையலறைகளின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளோம்,” என்று தேசிய உணவு அமைப்புத் தலைவர் டாடான் ஹிண்டாயானா வியாழக்கிழமை (அக்டோபர் 2) தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

விசாரணை நடத்துவதற்காகவும் திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்தவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். சுகாதார அமைச்சு, உணவு, மருந்துக் கண்காணிப்பு அமைப்புடன் சேர்ந்து உன்னிப்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இத்திட்டம் நாடு முழுவதும் தொடரும் என்றும் அவர் கூறினார்.

“பல பிள்ளைகளும் பெற்றோரும் இலவச உணவைப் பெற்றுக்கொள்ள இன்னமும் காத்திருக்கின்றனர். அதனால், திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு அதிபர் என்னிடம் கேட்டுக்கொண்டார்,” என்றார் திரு டாடான்.

இந்தோனீசிய சுகாதார அமைச்சர் புடி குனாடி சாடிக்கின், உணவு, மருந்துக் கண்காணிப்பு அமைப்புடன் சேர்ந்து தமது அலுவலகம் திட்டத்தை மேலும் அணுக்கமாகக் கண்காணிக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். நச்சுணவுச் சம்பவங்கள் தலைதூக்குகின்றனவா என்பதை சமூக சுகாதார நிலையங்களின் மூலம் தினமும் தெரிந்துகொள்ளப்போவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்