ஆ‌ஸ்திரேலியாவில் இலவச சூரியசக்தி மின்சாரத் திட்டம்

1 mins read
be55e0a4-e22b-4557-a6c1-5ad1f4ffdb1f
ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் வீடுகளின் கூரையில் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

பெர்த்: ஆஸ்திரேலியா சூரியசக்தியால் உற்பத்தியான மின்சாரத்தை ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று மணிநேரத்துக்கு அங்குள்ள வீடுகளுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

எரிசக்தி சேமிப்புத் திட்டத்தின்கீழ் அடுத்த ஆண்டுக்குள் சூரியசக்தியால் உற்பத்தியான மின்சாரம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆஸ்திரேலிய எரிசக்தி அமைச்சர் கிரிஸ் போவன் தெரிவித்தார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலும் தென் ஆஸ்திரேலியாவிலும் ‘சோலார் ‌ஷேரர்’ (Solar Sharer) என்ற சூரியசக்திப் பகிர்வுத் திட்டம் தொடங்கும். தென் கிழக்கு குவின்ஸ்லாந்திலும் திட்டம் தொடங்கப்பட்டுப் பின் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

நாளின் நடுப்பகுதியில் எரிசக்தி உற்பத்தி உச்சத்தில் இருக்கும்போது இலவச மின்சாரத்தைப் பயனீட்டாளர்கள் பெறுவர்.

“இலவச மின்சாரத்துக்கான நேரத்தின்போது மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் நேரடியாகப் பயனடைவர். அத்தகையோர் சூரியசக்தி தகடுகளைப் பொருத்தியிருந்தாலும் பொருத்தாவிட்டாலும் பயனடைவர். அதிகமானோர் திட்டத்தில் இணையும்போது ஒட்டுமொத்த மின்சாரச் செலவு குறையும்,” என்று திரு போவன் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் வீடுகளின் கூரையில் சூரியசக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. உச்சப் பகல் வேளைகளில் மின்சாரச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும் அளவுக்கு அவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தியாகிறது.

எனினும் புதிய சூரியசக்தி பகிர்வுத் திட்டத்தைச் சூரியசக்தி இல்லாத வீடுகளாலும் பெறமுடியும்.

2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் இயற்கை மின்சார உற்பத்தி 82 விழுக்காடாக இருக்கவேண்டும் என்று திரு போவன் 2022ஆம் ஆண்டு அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்