பாரிஸ்: தென்மேற்கு பிரான்சின் ஓட் வட்டாரத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) இரவு சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் 39 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அப்பகுதியில் வீசிய கடுமையான சூறாவளியால் பொமாஸ் கிராமத்தில் உள்ள கிட்டத்தட்ட 300 வீடுகள் சேதமடைந்தன. பல வீடுகளின் கூரைகள் முற்றிலுமாகப் பிடுங்கி எறியப்பட்டன. வீடுகள் வசிப்பதற்குப் பாதுகாப்பானவையா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், கிராம மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஏறத்தாழ 1,400 குடும்பங்கள் மின்சார வசதியின்றித் தவித்து வருகின்றன. அண்மைக்காலமாகக் கடுமையான கோடை வெப்ப அலையை எதிர்கொண்டு வந்த பிரான்சின் தெற்குப் பகுதிகளில், திடீரென உருவான இடியுடன் கூடிய மழைக்குப் பிறகு இந்த அரிதான சூறாவளி தாக்கியுள்ளது.
அருகிலுள்ள வெர்சாய் கிராமத்தில் சூறாவளி சுழன்று வீசியதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகின்றன. பல வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின.
பொதுவாக பிரான்சில் ஆண்டுக்குச் சில சூறாவளிச் சம்பவங்கள் பதிவானாலும், இந்த அளவுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவது மிகவும் அரிது. இது மக்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


