தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையில் வெறித்தனம்; ஜோகூரில் சிங்கப்பூரர் கைது

2 mins read
ba36ab64-179b-45bc-aa29-a92b0cef58d1
ஜோகூர் பாருவில் உள்ள நீதிமன்றத்தில் திங்கட்கிழமை அந்த சிங்கப்பூரர் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூரில் ஜூன் 7ஆம் தேதி சாலையில் வெறித்தனத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் சிங்கப்பூர் ஆடவரை மலேசியக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

ஜோகூர் பாரு நார்த் காவல்துறைத் தலைமையகத்தின் குற்றவியல் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஜூன் 8ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு அந்த 40 வயது ஆடவரைக் கைதுசெய்தனர்.

அவரிடமிருந்து பல்வேறு பொருள்களைக் காவல்துறை பறிமுதல் செய்ததாக ஜோகூர் பாரு நார்த் காவல்துறைத் தலைவர் பல்வீர் சிங் மகேந்தர் சிங் தெரிவித்தார்.

அன்றைய தினம் ஏற்பட்ட சம்பவம் குறித்து 31 வயது மலேசிய ஆடவர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்ததாக உதவி ஆணையர் பல்வீர் சிங் கூறினார்.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட டொயோட்டா ஆல்டிஸ் காரில் இருந்த ஒருவர், தம்மீது கார் ஒலிப்பானை எழுப்பியதாக அந்த ஆடவர் சொன்னார்.

தாமான் துன் ஆமினா பகுதியில் தமது பிஎம்டபிள்யூ கார் வழியை மறைத்ததால் அந்த சிங்கப்பூர் ஆடவர் அதிருப்தி அடைந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

“இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதைத் தொடர்ந்து, புகார் அளித்தவரின் காரை அந்தச் சந்தேக நபர் உதைத்து அதற்குச் சேதம் விளைவித்ததாக நம்பப்படுகிறது.

“அச்சம்பவத்தில் புகார்தாரருக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை,” என்றார் உதவி ஆணையர் பல்வீர்.

அந்த சிங்கப்பூரரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதற்கு முன்பு அவருக்கு எதிராகக் குற்றவியல் பதிவு எதுவும் இல்லை எனத் தெரியவந்ததாக உதவி ஆணையர் பல்வீர் சொன்னார்.

ஜோகூர் பாருவில் உள்ள நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூன் 9) அந்த ஆடவர் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.

குறிப்புச் சொற்கள்