கொழும்பு: இலங்கையில் கடுமையான நெரிசல் நிலவும் சிறைச்சாலைகளில் தொடரும் கொந்தளிப்புகளுக்கு இடையே, புதிதாக வெடித்த இரு சிறைக் கலவரங்களில் மூவர் கொல்லப்பட்டனர்; 23 பேர் காயமடைந்தனர்.
கொழும்பில் உள்ள ‘நியூ மேகசின்’ சிறையில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய கலவரத்தில் ஒரு கைதி உயிரிழந்தார்; 10 பேர் காயமடைந்தனர். தலைநகரிலிருந்து ஏறக்குறைய 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குருவிட்ட சிறையில் நடந்த மற்றொரு கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழந்த நிலையில் 13 பேர் காயமடைந்தனர் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
காவல்துறையினரும் சிறப்புப் படையினரும் இணைந்து இரு இடங்களிலும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதேபோல, நீர்கொழுப்பில் உள்ள திறந்தவெளிச் சிறையில் கைதிகள் நடத்திய போராட்டமும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கலவரம் நடந்த மூன்று சிறைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூரைகள் மீதும் திறந்தவெளிகளிலும் ஏறிப் போராட்டம் நடத்திய கைதிகள் மீண்டும் தங்களது அறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
நிலைமை தற்போது சீரடைந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் திட்டமிட்ட சதிச்செயல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகே முழு உண்மை தெரியவரும் என்றார் அமைச்சர்.
இலங்கையில் 11,000 பேருக்கு மட்டுமே இடவசதி உள்ள 22 சிறைகளில், தற்போது 41,000க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனை அனுபவிக்கின்றனர். எனவே விசாரணையின்றித் தாமதமாகும் வழக்குகளால் சிறைகளில் கடுமையான இடநெருக்கடி நிலவுகிறது.
நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளை விரைவாக முடித்து, சிறைக்கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசியலமைப்பில் திருத்தம் செய்ய இலங்கை அரசு திட்டமிடுகிறது.
ஜூலை மாதத் தொடக்கத்தில், நீர்கொழும்புச் சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் பத்து அதிகாரிகளும் 20 கைதிகளும் உயிரிழந்தனர். கடந்த வாரம் மஹரா சிறையில் நடந்த கலவரத்தில் ஒரு கைதி மாண்டார், பலர் காயமுற்றனர். அவ்விரு சிறைகளும் தலைநகருக்கு அருகில் உள்ளன.


