ஜெர்மனியின் பிரதமராகப் பதவி ஏற்க இருக்கும் ஃபிரெட்ரிக் மெர்ஸ்

ஜெர்மனியின் பிரதமராகப் பதவி ஏற்க இருக்கும் ஃபிரெட்ரிக் மெர்ஸ்

2 mins read
2144d505-d8fa-459f-86f5-c28960dea01f
தேர்தலில் வெற்றி பெற்ற 69 வயது திரு ஃபிரெட்ரிக் மெர்ஸ். - படம்: இபிஏ

பெர்லின்: ஜெர்மனியின் தேசிய தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்தது.

எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் திரு ஃபிரெட்ரிக் மெர்ஸ் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கிறார்.

ஆனால் 69 வயது திரு மெர்சின் தலைமையின்கீழ் செயல்பட இருக்கும் கூட்டணியில் வலதுசாரி கட்சியான ஏஎஃப்டியும் இடம்பெற உள்ளது.

அக்கட்சி தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

ஏஎஃப்டி கட்சியுடன் திரு மெர்ஸ் நீண்ட, சவால்மிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், ஐரோப்பாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்க செயல்பட இருப்பதாகத் திரு மெர்ஸ் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளிலேயே ஜெர்மனிதான் ஆகப் பெரிய பொருளியலைக் கொண்டுள்ளது.

தற்போது அந்நாட்டின் பொருளியல் பலவீனமாக உள்ளது.

ஜெர்மனியின் பொருளியலை மேம்படுத்தும் பொறுப்பு முதல்முறையாகப் பிரதமர் பதவி வகிக்க இருக்கும் திரு மெர்சுக்கு உள்ளது.

மேலும், குடியேறிகள் தொடர்பாகவும் ஜெர்மானியர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது.

குடியேறிகள் தொடர்பாக அந்நாட்டைச் சேர்ந்த பலரிடமிருந்து அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டிய அவசியம் திரு மெர்சுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கும் சீனா மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாட்டுக்கும் இடையே ஐரோப்பிய நாடுகள் சிக்கித் தவிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையையும் திரு மெர்ஸ் சமாளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, ஜெர்மானிய தேர்தல் முடிவுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

“எரிசக்தி, குடிநுழைவு தொடர்பாக அர்த்தமில்லாத விவகாரங்கள், கொள்கைகள் குறித்து அமெரிக்கர்களைப் போலவே ஜெர்மானியர்களும் விரக்தி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருகிறது,” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

நடந்து முடிந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 28.5 வாக்குகளை வென்றது.

வலதுசாரி ஏஎஃப்டி கட்சி 20.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.

அடுத்த தேர்தலில் மற்ற கட்சிகளைவிட அதிகமான வாக்குகளை வெல்ல இலக்கு கொண்டுள்ளதாக ஏஎஃப்டி கட்சியின் தலைவர் அலிஸ் வெய்டெல் தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்