கண் இமைக்கும் நேரத்தில் ஆடவரை நீருக்குள் இழுத்துச் சென்ற முதலை

கண் இமைக்கும் நேரத்தில் ஆடவரை நீருக்குள் இழுத்துச் சென்ற முதலை

காப்பாற்ற முடியாமல் செய்வறியாது திகைத்து நின்ற நண்பர்கள்
படம்: அன்ஸ்பிளேஷ்

21 Sep 2023 - 12:03 pm

1 mins read

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் நண்பர்கள் நால்வர் புதன்கிழமை அதிகாலை கம்புங் தினாகியனுக்கு அருகே இருக்கும் தஞ்சோங் லேபியன் நீர்ப்பகுதியில் நண்டு பிடித்துக்கொண்டிருந்தனர்.

அங்கிருந்த முதலை கண் இமைக்கும் நேரத்தில் 23 வயது ஆடவர் ஒருவரைத் தாக்கி அவரைத் தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது.

அந்த முதலையிடமிருந்து தங்கள் நண்பரைக் காப்பாற்ற முடியாமல் மற்ற மூவரும் செய்வறியாது திகைத்து நின்றனர்.

அவர்கள் அனைவரும் பனைத் தோட்டத்தில் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆவர்.

பின்னர் காலை 7.20 மணியளவில், 4.8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்போங் தஞ்சோங் பத்து என்ற இடத்தில் இருக்கும் ராணுவச் சாவடிக்கு அருகில் உள்ள கடற்கரையில் அந்த ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது எனக் காவல்துறைத் தலைவர் ரோகன் ஷா அகமது கூறினார்.

மேலும், அந்த ஆடவரின் உடலில் இடது கை, தலை போன்ற பகுதிகளில் முதலை கடித்த அடையாளங்களும் மார்பு, பின்புறப் பகுதிகளில் கீறல்களும் இருந்தன என அவர் குறிப்பிட்டார்.

காவல்துறையினர் அந்த ஆடவரின் உடலை உடற்கூராய்வுக்காக லாகாட் டத்து மருத்துவமனையின் தடயவியல் துறைக்குக் கொண்டு சென்றதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியா