எரிபொருள் விலைத் தள்ளுபடி மலேசியர்களுக்கு உதவியாக இருக்கும்: ஃபோம்கா

எரிபொருள் விலைத் தள்ளுபடி மலேசியர்களுக்கு உதவியாக இருக்கும்: ஃபோம்கா

2 mins read
63fd9c50-f398-4b27-8c70-a28e8a4df828
மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது பயனீட்டாளருக்கு நம்பிக்கையை அளிக்கும் என்று மலேசியக் கூட்டரசு பயனீட்டாளர் சங்கம் (ஃபோம்கா) தெரிவித்துள்ளது. - படம்: எஸ்பிஎச் மீடியா

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், எரிபொருள் விலையில் கொடுக்கப்படும் தள்ளுபடியைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள முன்வந்திருப்பது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று மலேசியக் கூட்டரசு பயனீட்டாளர் சங்கம் (ஃபோம்கா) தெரிவித்திருக்கிறது.

விலைவாசி உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்குதலைச் சமாளிக்கவும் அது கைகொடுக்கும் என்று கருதப்படுகிறது. உலக அளவில் எரிபொருள் விநியோக நெருக்கடியால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை எதிர்கொள்ள மலேசியா தள்ளுபடியை வழங்கிவருகிறது.

அரசாங்கத்தின் முயற்சியைச் சங்கம் வரவேற்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சரவணன் தம்பிராஜா கூறினார். மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது நுகர்வோருக்கு நம்பிக்கையை அளிக்கும் என்றார் அவர்.

எரிபொருள் விலைகளைத் தற்போதைய நிலையிலேயே வைத்திருப்பது போக்குவரத்து, தளவாடச் செலவுகளைக் குறைக்கப் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று டாக்டர் சரவணன் குறிப்பிட்டார். அன்றாட அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்வதைத் தடுக்க விநியோக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதும் முக்கியம் என்று அவர் சொன்னார்.

“பொருள்களின் விலைகளை நிர்ணயிப்பது எரிபொருள் மட்டுமன்று என்று சங்கம் கருதுகிறது. உணவு, எரிசக்தி, வாடகை, சம்பளம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் செலவுகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இருப்பினும் ரோன்95 விலையை அப்படியே வைத்திருப்பது பணவீக்கத்தைச் சமாளிக்க உதவும்,” என்று டாக்டர் சரவணன் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

மலேசிய இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொருளியல், பரிவர்த்தனைத் துறையின் மூத்த விரிவுரையாளர் முஹம்மட் ‌ஷுக்கோர் ஹருண், அரசாங்கத்தின் கடப்பாட்டைப் பொறுப்புள்ள நடவடிக்கை என்று பாராட்டினார். குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதில் அது உதவுவதை அவர் குறிப்பிட்டுச் சொன்னார்.

“இருப்பினும் மக்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, தற்போதைய தள்ளுபடித் திட்டம் பிற்போக்கானதாகத் தெரிகிறது. காரணம் அது பணக்காரர்களுக்கும் பலனளிக்கிறது. உலக அளவில் எண்ணெய் விலை அதிகரிக்கும்போது தள்ளுபடி தொடர்ந்தால், நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும், கூடுதல் செலவாகும். அதை மாற்றிவிட்டால் வளர்ச்சி, கல்வி, சுகாதாரப் பராமரிப்புத் துறைகளுக்கு நிதியைப் பயன்படுத்த முடியும்,” என்றார் அவர்.

உலகளாவிய பொருளியல் நெருக்குதலைச் சமாளிப்பதில் மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக்கூடிய உத்தியை அவர் முன்வைத்தார். குறிப்பிட்ட பிரிவினருக்குத் தள்ளுபடிகளை நடைமுறைப்படுத்துவதும் அதில் அடங்கும் என்றார் டாக்டர் ‌ஷுக்கோர் ஹருண்.

குறிப்புச் சொற்கள்