ஜூன் மாதத்திலிருந்து எரிபொருள் விநியோகம் சவாலாக இருக்கும்: மலேசிய அமைச்சர்

ஜூன் மாதத்திலிருந்து எரிபொருள் விநியோகம் சவாலாக இருக்கும்: மலேசிய அமைச்சர்

2 mins read
d7359c3e-88a1-4fab-9ab4-cd4a2881c673
மலேசியாவில் எரிபொருள் விநியோகத்தை உறுதிசெய்வதில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: இபிஏ

கோலாலம்பூர்: மலேசியா ஜூன் மாதவாக்கில் எரிபொருள் விநியோகத்தில் சவாலை எதிர்கொள்ளும் முக்கியமான காலகட்டத்தைக் கடக்க வேண்டி உள்ளது என்று அந்நாட்டின் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹம்மது நசிர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலால் உருவான எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க மலேசியா நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டதாக த ஸ்டார் இணையச் செய்தி தெரிவிக்கிறது.

“எரிபொருள் விநியோகத்தை உறுதிசெய்வதில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும்,” என்று திரு அக்மல் கூறினார்.

மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து பெறப்படும் மூலப்பொருள்கள் உட்பட, பிற மூலப்பொருள்கள் தொழில்துறைகளுக்குப் போதுமான அளவில் கிடைப்பதும் அதே அளவுக்கு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களை அவர் அவ்வாறு சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய எரிபொருள் நெருக்கடியால் மலேசியா பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டும் வகையில், ஜூன் மாதத் தொடக்கத்திலேயே எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மையை மலேசியா எதிர்கொள்ளக்கூடும் என்று மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் இந்தத் தொடக்கத்திலேயே கோடி காட்டியிருந்தார்.

“ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு அரசாங்கத்திடம் நிலையான எரிபொருள் விநியோகம் உள்ளது. ஆனால் ஜூன் மாதத்திலிருந்து விநியோகத்தை உறுதிசெய்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கும்,” என்று திரு அக்மல் தெரிவித்தார்.

மலேசிய அரசாங்கம் தனது எரிபொருள் ஆதாரங்களைப் பன்முகப்படுத்தவும் முக்கிய வர்த்தகப் பங்காளிகளுடனான உறவுகளை வலுப்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேவை அதிகரித்ததன் காரணமாக சில பெட்ரோல் நிலையங்களில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டுள்ளபோதிலும் விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக மலேசிய உள்நாட்டு வர்த்தகத் துணை அமைச்சர் ஃபுசியா சல்லே கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்